search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிப்பு - உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

    அமைதிக்கான நோபல் பரிசு பெறப்போவது யார் என்று நாளை அறிவிப்பு வெளியாகிறது. உலகம் முழுவதும் அதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ஆஸ்லோ:

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

    தற்போது, கொரோனா பரவல், ராணுவ மோதல்கள், பருவநிலை மாற்றம் என உலகமே சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது. இந்த நேரத்தில், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு, நம்பிக்கை ஒளிக்கீற்றாக அமையும் என்று உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    பருவநிலை செயற்பாட்டாளர்கள், சர்வதேச அமைப்புகள், அரசியல் பிரபலங்கள் என நோபல் பரிசு போட்டியாளர்களுக்கு பஞ்சம் இல்லை. இவர்களில் நார்வே நோபல் குழு, யாரை தேர்ந்தெடுக்கும் என்பது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.

    உலகம் முழுவதும் இருந்து 318 பரிந்துரைகள் வந்துள்ளன. இவற்றில், 211 பேர் தனிநபர்கள், மற்றவை, அமைப்புகள் ஆகும். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவகால செயற்பாட்டாளர் கிரேடா தன்பெர்க், விஷம் கொடுக்கப்பட்டதாக கருதப்படும் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி, உலக சுகாதார அமைப்பு ஆகிய 3 தரப்புகள் மீது பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    ஆனால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, பரிந்துரைகளுக்கு கடைசி நாளாக இருந்தது. அதன் பிறகுதான், கொரோனா வைரஸ், சர்வதேச பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு ஆற்றிய பங்கு, நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்படாது.

    அதுபோல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த விருது பெற தனக்கு தகுதி இருப்பதாக கருதுகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஐ.நா.வுக்கும், அதன் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரசுக்கு வழங்கலாம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டேன் ஸ்மித் யோசனை தெரிவித்துள்ளார்.

    சீனாவின் உய்குர் பகுதியை சேர்ந்த பொருளாதார நிபுணர் இலாம் டோடி மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களுக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×