search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்1பி விசா
    X
    எச்1பி விசா

    ‘எச்1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி

    அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் ‘எச்1 பி’ விசா வழங்குவதில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விசா மூலம் வெளிநாட்டினர் அங்கு 3 ஆண்டுகள் தங்கியிருந்து வேலை செய்யலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.

    இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். சமீபத்திய தரவுகளின்படி அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த ‘எச்1 பி’ விசாதாரர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

    அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்கிற கொள்கையில் விடாப்பிடியாக கொண்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், தான் பதவிக்கு வந்த நாள் முதல் ‘எச்1 பி’ விசா நடைமுறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து வருகிறார்.

    இதனால் புதிதாக ‘எச்1 பி’ விசா பெறுவதிலும் அதை நீட்டிப்பதிலும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ‘எச்1 பி’ விசா வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் புதிய விதிகளை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது தகுதி அடிப்படையில் அதீத திறமை கொண்டவர்களுக்கு மட்டுமே விசா வழங்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    இந்த புதிய விதிகள் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு அமெரிக்கர்களின் வேலைகள் மற்றும் ஊதியங்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் துணைச் செயலாளர் கென் கியுசினெல்லி இதுபற்றி கூறியதாவது:-

    ‘எச்1 பி’ விசா திட்டத்தால் சுமார் 5 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை இழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு மாற்றாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்துவதே ஆகும். குறைந்த ஊதியத்துக்கு ஆள் கிடைப்பதால் பணியாளர்களின் திறன்கள் மீது நிறுவனங்கள் அக்கறை கொள்வதில்லை.

    அதற்காகவே தற்போதைய புதிய விதி நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

    அதேபோல் விசா ஒப்புதலுக்கு முன்னும் பின்னும் தொழிலாளர்களின் திறன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதீத திறமையானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மட்டுமே விசா ஒதுக்கப்படும்.

    ‘எச்1 பி’ விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் புதிய விதிகளின் கீழ் மறுக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கெடுபிடியால் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×