search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி
    X
    முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி

    கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா - தனிமைப்படுத்திக்கொண்டார் அமெரிக்க முப்படை தலைமை தளபதி

    அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி உள்பட பாதுகாப்புபடையின் முக்கிய தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. 

    வெள்ளைமாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவே அதிபர், உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார். 

    பென்டகன் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி
    ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அந்நாட்டின் பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல்ப்படை துணைதளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து, பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதிஹ் ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்திலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதிகாரிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
      
    Next Story
    ×