search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    துபாய் சுகாதார ஆணையத்தின் வாட்ஸ்-அப் உதவி எண் மூலம் கொரோனா விழிப்புணர்வு

    கொரோனா குறித்து தெரிந்து கொள்ள உதவும் வகையில் துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் உதவி எண்ணில் 54 ஆயிரத்து 881 பேர் தொடர்பு கொண்டு பயன் பெற்றனர்.
    துபாய்:

    துபாய் சுகாதார ஆணையத்தின் வாடிக்கையாளர் மகிழ்ச்சி துறையின் இயக்குனர் பாத்திமா அல் காஜா கூறியதாவது:-

    துபாய் நகரில் கொரோனா பாதிப்பை தடுக்க துபாய் சுகாதார ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கொரோனா குறித்த பாதிப்பை தெரிந்து கொள்ள உதவும் வகையில் வாட்ஸ்-அப் எண் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வாட்ஸ்-அப் சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு கொரோனா குறித்த தங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த சேவையை கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் 54 ஆயிரத்து 881 பேர் தொடர்பு கொண்டு பயன் பெற்றனர்.

    அவர்கள் கொரோனா குறித்து தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை தெரிவித்தனர். அந்த கேள்விகளுக்கு மருத்துவத்துறை ஊழியர்கள் தேவையான பதில்களை வழங்கினர். ‘சாட்டிங்’ முறையில் ஏற்படுத்தப்பட்ட இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது. அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த சேவை இருந்து வருகிறது.

    இந்த சேவையை பயன்படுத்தி கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் துபாய் சுகாதார ஆணையத்தின் பல்வேறு சேவைகள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வாட்ஸ்-அப் எண் சேவை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது முதல் அதிகமானவர்கள் தொடர்பு கொண்டு பயன் பெற்றனர்.

    இதில், நான் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமா?, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள என்ன வழிமுறைகள்?, கொரோனா இல்லை என சான்றிதழ் பெறுவது எப்படி?, என்பன போன்ற கேள்விகளை அதிகமாக பொதுமக்கள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.

    வாட்ஸ்-அப் சேவையின் மூலம் கொரோனா குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததுடன், சமூக வலைத்தளத்தில் வந்த தவறான தகவல்கள் குறித்து உறுதி செய்யவும் முடிந்தது. பேஸ்புக் நிறுவனத்தில் துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் பொதுமக்களை சென்றடைய உதவியது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் துபாய் சுகாதார ஆணையத்தின் சேவைகளுக்கு ‘லைக்’ போட்டு உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இவர்கள் 3 கோடியே 60 லட்சம் முறை சமூக வலைத்தளங்களை பார்வையிட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×