search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் நடந்த பகுதி
    X
    தாக்குதல் நடந்த பகுதி

    பாரீசில் பயங்கரவாதிகளால் 12 பேர் கொல்லப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன் மீண்டும் கத்திக்குத்து சம்பவம்

    பாரீசில் பயங்கரவாதிகளால் 12 பேர் கொல்லப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன்பு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பாரீஸ்:

    சார்லி ஹெப்டோ என்னும் பத்திரிகை முகமது நபியை அவமதிக்கும் விதத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக பயங்கரவாதிகள் இருவர் 2015-ம் ஆண்டு பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுச்சி சகோதரர்கள் என்று அழைக்கப்படும் செரீப் மற்றும் சயத் கவுச்சி ஆகியோரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையில், அவர்களுக்கு உதவியதாக 14 பேர் மீது இம்மாதம் 2-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.

    வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதைக் குறிப்பிடும் வகையில், சார்லி ஹெப்டோ பத்திரிகை, 2015-ல் வெளியிடப்பட்ட அதே சர்ச்சைக்குரிய படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது. இப்போது மறைவிடம் ஒன்றில் அந்த பத்திரிகை நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துகொண்டே இருந்தது. கவுச்சி சகோதரர்கள் தொடங்கிய பணியை முடித்தே தீருவோம் என பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தனர்.

    இந்நிலையில், அதே அலுவலகம் முன்பு யாரோ மர்ம நபர் பட்டாக்கத்திகளால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சொன்னது போலவே தாக்குதலை தொடங்கிவிட்டார்களா பயங்கரவாதிகள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    அத்துடன், சற்று நேரத்திற்கு முன் தாக்குதல் நடத்தியவர்கள் எந்த நேரமும் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×