search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக நாடுகளின் தலைவர்கள் (கோப்பு படம்)
    X
    உலக நாடுகளின் தலைவர்கள் (கோப்பு படம்)

    கொரோனாவை போன்று பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் - உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா.பொதுச்செயலாளர்

    உலக நாடுகள் ஒற்றுமை இல்லாமல் கொரோனாவை கையாண்டது போல பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அஞ்சுகிறேன் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
    ஜெனீவா:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உரையின்போது கொரோனா வைரஸ் பரவ முழு காரணமும் சீனா தான் என குற்றச்சாட்டினார். மேலும், உலகின் தற்போதைய பேரழிவுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    ஆனால், அமெரிக்க அதிபரின் கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. டிரம்ப் ‘அரசியல் வைரஸ்’ பரப்புகிறார் என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்தது. 

    மேலும், ரஷியாவும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தது. இதனால், ஐ.நா. பொதுக்கூட்டம் உலக நாடுகள் வார்த்தை மோதலில் ஈடுபடும் இடமாக மாறியது. 

    இந்நிலையில், உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாததற்கு பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை கையாண்டது போன்றே பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஐ.நா. பொதுச்செயலாளர்

    இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ கூறியதாவது:-

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்து விட்டது. வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பிற்கு வைக்கப்பட்ட பரீட்சை. இந்த பரீட்சையில் நாம் அடிப்படையிலேயே தோல்வியடைந்து விட்டோம்.

    உலக நாடுகளில் இந்த தொற்று பாதிப்பை எதிர்க்கொள்ள தயாராக இல்லாததும், நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஒற்றுமை இல்லாததுமே இதற்கு காரணம்.

    ஒற்றுமையில்லாமலும், சீர்குலைந்து ஒழுங்கற்ற நிலையில் கொரோனாவை எதிர்கொண்டது போன்று உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என நான் அஞ்சுகிறேன்.

    என அவர் தெரிவித்தார்.  
    Next Story
    ×