search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்
    X
    ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழக அதிகாரி செந்தில்குமாரின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது..

    ஜெனிவா:

    ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் 45-வது அமர்வு ஜெனிவாவில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தமிழ் நாட்டைச் சேர்ந்த செந்தில் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அந்நாட்டின் அத்துமீறல்களை தோலுரித்தார்.

    சர்வதேச அரங்கில் மற்றவர்களை பற்றி பேசுவதற்கு முன்பு பாகிஸ்தான் முதலில் தனது சொந்த நாட்டை கவனிப்பது நல்லது. பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஆள் கடத்தல், மிரட்டல்கள், சித்ரவதைகள், மாயமாகி போவது, ரகசிய தடுப்பு முகாம்கள் ஆகியவை தொடர்ந்து நடை பெறுகின்றன.

    இத்தனை மனித மீறல்களையும் பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாக செய்து வருகிறது.  பாகிஸ்தான் மனித செயல்பட்டாளர் மாயமாகி 9 மாதங்கள் ஆகின்றன.

    பாகிஸ்தானின் கில்ஜிட் பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அன்றாடம் இருந்து வருகின்றன. பல மாகாணங்களில் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட, எந்தவித காரணமின்றி கைது செய்யும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

    பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்ட ஹஸ்ஸன், ஹிஸ்புல்லா கம்ரானி ஆகியோருக்காக அவர்களின் சகோதரி ஹசீபா கம்ரானி வெளிப்படுத்தும் அழுகை கேட்பாரற்று போனது.

    இதுதான் பாகிஸ்தானில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் துயர நிலை. இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானில் நீங்கள் வீடு திரும்ப முடியாது என்று அங்குள்ளவர்கள் பேசுகிறார்கள்.

    பாகிஸ்தானில் தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

    இந்தியா குறித்து அவதூறு பிரசாரங்களை பாகிஸ்தான் மேற்கொண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலையே திசை திருப்பவும் முயற்சிக்கிறது.

    பாகிஸ்தானின் செயல்பாடுகள் எங்களை ஆச்சரியப்படுத்தா விட்டாலும் இந்தியாவின் உள் வி‌ஷயங்கள் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் பொறுப்பற்ற குறிப்புகள் கூடிய மோசமான பிரசாரத்தை முன்னேடுத்து பாகிஸ்தான் திசை திருப்ப முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழக அதிகாரி செந்தில்குமாரின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    Next Story
    ×