search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டிக் டாக் செயலிக்கு தடை : அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

    டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    பீஜிங்:

    இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும், அந்த நாட்டின் மூத்த எம்.பி.க்கள் பலரும் வரவேற்றனர். அது மட்டுமின்றி அமெரிக்காவிலும் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.

    அதனைத் தொடர்ந்து சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந் தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.

    இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் “அதிருப்தி” அடைந்திருப்பதாக டிக்-டாக்கின் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வீ சாட் செயலியை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம் இந்த தடை “துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் அடக்குவதற்கு அமெரிக்கா பலமுறை அரசு அதிகாரத்தை பயன்படுத்தியது. இது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்க முதலீட்டு சூழலில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தகத்தை சேதப்படுத்தியது.

    அமெரிக்கா உடனடியாக கொடுமைபடுத்துதலை நிறுத்தி சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும்.

    அமெரிக்கா தனது சொந்த வழியை கொண்டிருப்பதில் உறுதியாக இருந்தால் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×