search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமீரக பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ‘மெஸன்சாட்’ செயற்கைக்கோளை படத்தில் காணலாம்.
    X
    அமீரக பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ‘மெஸன்சாட்’ செயற்கைக்கோளை படத்தில் காணலாம்.

    ‘மெஸன்சாட்’ செயற்கைக்கோள் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது- அமீரக விண்வெளி ஏஜென்சி தகவல்

    வளிமண்டலத்தில் கலந்துள்ள நச்சுவாயுக்களின் அளவை கணக்கிடும் ‘மெஸன்சாட்‘ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
    அபுதாபி:

    அமீரக விண்வெளி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் தேசிய அளவில் விண்வெளித்துறையில் திறனாளர்களை மேம்படுத்தவும், ஆராய்ச்சிகளை வளர்ச்சியடைய செய்யவும் அரசு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்க செயற்கைக்கோள் தயாரிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் அபுதாபி பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்பு ஆய்வு கூடத்தில் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் ‘மெஸன் சாட்’ என்ற கியூப் வகை செயற்கைக்கோளை தயாரிக்க கடந்த ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அமீரக விண்வெளி ஏஜென்சி அளித்த நிதியில், அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகியவைகளின் கூட்டு முயற்சியில் இந்த செயற்கைக்கோளானது கலீபா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது கையடக்க அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோள் முழுக்க முழுக்க பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கலீபா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் ஆய்வுக்கூட கட்டுப்பாடு அறை மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘மெஸன்சாட்’ செயற்கைக்கோள் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களின் அளவு மற்றும் நச்சுத்தன்மைகளை ஆராய்ச்சி செய்து தகவல் சேகரிக்கப்பட உள்ளது. 1650 முதல் 1000 நானோ மீட்டர் அளவுள்ள சிற்றலையில் இதன் தகவல்களை பெற முடியும். ரஷியாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் ‘சோயுஸ் 2 பி’ என்ற ராக்கெட்டில் இந்த ‘மெஸான் சாட்’ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளுடன் 14 நானோ செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் எடுத்து செல்லப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளானது வளிமண்டலத்தில் உள்ள நச்சுவாயுக்களை மட்டுமல்லாமல் கடல்சார் உயிரின பரவல் குறித்தும் ஆய்வு செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×