search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    துருக்கியில் ரகசிய தகவலை வெளியிட்டதாக 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை

    ரகசிய தகவலை வெளியிட்டதாக ஒரே நேரத்தில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்திருப்பது துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அங்காரா:

    துருக்கியில் பேரிஸ் டெர்கோக்லு, ஹூல்யா கிலிங்க், எரன் எகின்சி, பேரிஸ் பெஹ்லிவன், பெர்ஹட் செலிக், அய்தின் கெசர், எரிக் அகாரர், முரார் அகிரல் ஆகிய 8 பத்திரிகையாளர்கள் வெவ்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் லிபியாவில் கொல்லப்பட்ட தேசிய நுண்ணறிவு அமைப்பின் ஊழியர்களுடைய புனைப்பெயர்களை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது.

    அதே நேரத்தில், பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் அகிரல், பெர்ஹட் செலிக் மற்றும் அய்தின் கெசர் ஆகிய 3 பேருக்கு தலா 56 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எரிக் அகாரர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்திருப்பது துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×