search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்து
    X
    அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்து

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து - அகதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

    கிரீஸ் நாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 13 ஆயிரம் பேர் தங்குமிடத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    ஏதேன்ஸ்:

    உள்நாட்டுப்போர், பயங்கரவாதம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மர், லிபியா மேலும் ஆப்ரிக்காவை சார்ந்த பல நாட்டு மக்கள் அகதிகளாக உள்ளனர்.

    இவர்கள் வேலைவாய்ப்பு, தங்குமிடம், பொருளாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்க்ளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக கடல் மற்றும் நிலப்பரப்பு வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்களை ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் எல்லையிலேயே பிடித்து முகாம்களில் தங்கவைத்துள்ளனர். மேலும், இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து அகதிகள் வெளியே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

    இதற்கிடையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் குடியிருப்பு கிரீஸ் நாட்டில் உள்ளது. கிரீஸ் நாட்டின் லஸ்போஸ் தீவின் மொரியா நகரில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதியில் 13 ஆயிரம் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகதிகள் குடியிருப்பில் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். 

    இந்த அகதிகள் குடியிருப்பில் தங்கி இருந்து 35 அகதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வர விரும்பவில்லை. இதனால் அகதிகள் குடியிருப்பு பகுதியில் கொரோனா பரவலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

    இந்நிலையில், இந்த அகதிகள் குடியிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் வசித்து வந்த அகதிகள் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

    அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்து

    மேலும், அகதிகளுக்கும்,  கிரீஸ் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று திடீரென மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அதேபோல், அகதிகள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் வசித்து வரும் கிரீஸ் நாட்டு மக்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதியில் இருப்பதை விரும்பவில்லை எனவும், அவர்கள் தான் குடியிருப்புக்கு தீ வைத்துள்ளனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    ஆனால், குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான உண்மையான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.

    இந்த தீ விபத்தால் அகதிகள் குடியிருப்புகள் முழுவதும் தீக்கிரையாகி முற்றிலும் அழிந்து விட்டது. இந்த தீயை அணைக்கவந்த தீயணைப்பு படையினரை அகதிகள் சிலர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    தீ விபத்தால் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்பை இழந்துள்ளனர். அவர்கள் மொரியா நகர சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மொரியா நகரில் இருந்து அகதிகள் யாரும் வெளியே செல்லாத அளவிற்கு நகரின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அகதிகளுக்கான தற்காலிக முகாம்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் கிரீஸ் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.      

    Next Story
    ×