search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மெக்சிகோவில் பயங்கரம் : இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி

    மெக்சிகோவில் இறுதிச்சடங்கில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    மோரேலஸ்:

    மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே உள்ள குர்னாவாக்கா நகரில் நேற்று முன்தினம், மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம் அடைந்த ஒருவரது இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.

    இதில், பலியானவரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அங்கு கூடி இருந்தவர்கள், இதைக்கண்டு பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    இதே நகரில் கடந்த மாதம் துப்பாக்கி ஏந்திய நபர்கள், வீதியில் மது அருந்திக்கொண்டிருந்த 6 இளைஞர்களை குருவியை சுடுவது போல சுட்டுக்கொன்றது நினைவுகூரத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம், நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடந்த 2 மாதங்களுக்கு பின்னர் இன்னொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

    இப்படி தொடர்ந்து இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்று வருவது மெக்சிகோ மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×