search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஸ்கான்சின் வந்தடைந்த ஜோ பைடன்
    X
    விஸ்கான்சின் வந்தடைந்த ஜோ பைடன்

    போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவர் ஜேக்கப்பின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜோ பைடன்

    அமெரிக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் 7 முறை சுட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 குண்டுகள் ஜேக்கப் உடல் மீது பாயந்தது. உடனடியாக அவர் படுகாயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.

    ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணம் உள்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையில் முடிந்த வண்ணம் உள்ளது. 

    இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

    இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருவரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடைபெற உள்ள தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதற்கிடையில், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜேக்கப் பிளேக் மீது தாக்குதல் நடந்த மாகாணமான விஸ்கான்சினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப் சென்றார்.

    அங்கு தனது ஆதரவாளர்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்ட டிரம்ப் பின்னர் ஜேக்கப் பிளேக் மீதான துப்பாக்கிச்சூட்டை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.

    ஜேக்கப்பின் குடும்பத்தினரை சந்தித்து திரும்பிய ஜோ பைடன்

    பின்னர் பேசிய டிரம்ப் போராட்டக்காரர்களை கண்டிக்கும் விதமாக ‘இது ஒரு உள்நாட்டு பயங்கரவாதம்’ என விமர்சனம் செய்தார். மேலும், அவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்த ஜாக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை.  

    இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். விமானம் மூலம் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வோகி நகரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வந்தடைந்தனர்.

    இந்த பயணத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் விமான நிலையத்திலேயே சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

    விமான நிலையத்தில் தனி அறையில் ஜோ பைடனை ஜோக்கப்பின் குடும்பத்தினர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜேக்கப்பின் தந்தை மற்றும் 3 சகோதரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் ஜோ பைடன் தனது 
    வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.

    பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜேக்கப்பிடம் ஜோ பைடன் வீடியோ கால் மூலம் பேசினார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் தங்கள் ஆதரவை ஜோ பைடனுக்கு தர ஜேக்கப்பின் குடும்பத்தினர் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜேக்கப் குடும்பத்தினருடன் சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் கினோஷா நகருக்கு சென்ற பைடன் தேவாலயத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

    ஜேக்கப்பின் குடும்பத்தினரை அதிபர் டிரம்ப் சந்திக்காத போதும் ஜோ பைடன் சந்தித்துள்ள நிகழ்வு தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×