search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும்

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் என ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
    நியூயார்க்:

    ஐ.நா. சபையில் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாலின சமத்துவம் என்ற தலைப்பில், ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாக்கலான இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * கொரோனாவால் தெற்காசியாவில் (இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை) பாலின வறுமை இடைவெளி இன்னும் மோசம் அடையும்.

    * பெருந்தொற்றால் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும். 25-34 வயதுக்குட்பட்ட ஆண்களை விட அதிகமான பெண்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருப்பார்கள்.

    * கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், 2021-க்குள் 4 கோடியே 70 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடும் வறுமையில் தள்ளிவிடும்.

    * உலகிலேயே கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 87 சதவீதம் பேர் வசிக்கிற மத்திய மற்றும் தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வறுமை மேலும் அதிகரிக்கும். அதாவது மத்திய மற்றும் தெற்காசியாவில் மேலும் 5 கோடியே 40 லட்சம் பேரும், ஆப்பிரிக்காவில் 2 கோடியே 40 லட்சம் பேரும் சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையை கொரோனா ஏற்படுத்தி விடும்.

    * தெற்காசியாவில் வறுமை பெருக காரணம், பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகும்.

    * கொரோனா காலத்துக்கு முன்பாக 2021-ம் ஆண்டில் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. இப்போது கொரோனாவுக்கு பின்னே இந்த விகிதம், 13 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    * பெருந்தொற்றால் வறுமை மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது பாலின வறுமை இடைவெளிகளை மேலும் ஆழமாக்கும். 25-34 வயதுடையவர்களுக்கு இது பொருந்தும்.

    * அடுத்த ஆண்டில் (2021) உலகளவில் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற அளவில் ஏழைகள் இருப்பார்கள். 2030-ல் இது 100 ஆண்களுக்கு 121 பெண்கள் என்ற அளவுக்கு மேலும் உயரும். 25-34 வயதினரில், 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற விகிதாசாரம் தெற்காசியாவில் இருக்கும். இதுவே 2030-ல் 100 ஆண்களுக்கு 129 பெண்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.

    * உலகளவில் பெண்கள் வறுமை விகிதம் 2019-2021 இடைவெளி 2.7 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனாவால் இடைவெளி 9.1 சதவீதமாக அதிகரிக்கும். இந்த பெருந்தொற்று நோய், அடுத்த ஆண்டுக்குள் 9 கோடியே 60 லட்சம் பேரை கூடுதலாக கடும் வறுமையில் தள்ளும். அவர்களில் 4 கோடியே 70 லட்சம் பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆவர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×