search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அமெரிக்காவில் காப்பீடு மோசடி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், மகளுக்கு 18 மாதம் சிறை

    அமெரிக்காவில் காப்பீடு மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், மகளுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மன்ஜித் சிங் (வயது 49) அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவரது மகள் ஹர்பனீத் சிங் (27) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மன்ஜித் சிங் தனது சூப்பர் மார்க்கெட்டுக்கான காப்பீட்டு தொகையை மோசடி செய்து பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டினார். இந்த சதித்திட்டத்துக்கு தனது மகளின் உதவியை அவர் நாடினார். இதற்காக ஹர்பனீத் சிங் கனடாவில் இருந்து அமெரிக்கா வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தாய், மகள் இருவரும் சேர்ந்து தங்களது சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்தனர். இதையடுத்து தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்காக 5000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம்) இழப்பீடாக வழங்குவதாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம் 1,000 டாலரை முன்பணமாக வழங்கியது. எஞ்சிய 4,000 டாலரை வழங்குவதற்கு முன்னர் காப்பீட்டு நிறுவனம் இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தியது. தாய், மகளின் சதித்திட்டம் அம்பலமானது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. இதில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×