search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா அறிகுறிகளின் வரிசையை கண்டறிந்த விஞ்ஞானிகள்

    கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தினர்.
    கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் தத்தளித்து வருகின்றன. இது தொடர்பான ஆய்வுகள் உலகளவில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தி வந்தனர்.

    இந்த ஆய்வு முடிவுகள், ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

    இவை காய்ச்சல், இருமல், தசைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு என கொரோனா வைரஸ் அறிகுறிகளை வரிசைப்படுத்தலாம் என காட்டுகின்றன.

    இதுபற்றிய ஆய்வினை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் உயிரிமருத்துவ என்ஜினீயரிங் பேராசிரியர் பீட்டர் குன் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுகளுடன் இணைந்த காய்ச்சல் போன்ற நோய்களின் சுழற்சிகளை நாம் ஒன்றுடன் ஒன்றை கொண்டிருக்கும்போது, இந்த வரிசையை தெரிந்து கொள்வது முக்கியமானது” என்கிறார்.

    ஏன் அப்படி சொல்கிறார்? அதற்கு அவரே விளக்கமும் தருகிறார் இப்படி.

    “கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இந்த வரிசைப்படி அமையலாம் என்ற தற்போதைய ஆய்வு முடிவைக்கொண்டு, நோயாளிகளை பராமரிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை டாக்டர்கள் தீர்மானிக்க முடியும். அவர்களது நிலைமை மோசமாவதை தடுக்கவும் முடியும்” என்கிறார்.

    மேலும், ஆரம்பத்தில் நோயாளிகளை அடையாளம் காண்பது ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நேரத்தை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிறந்த அணுகுமுறைகள் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது சிறப்பாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரையில் உலக சுகாதார நிறுவனத்தினால் சீனாவில் இருந்து பெறப்பட்ட கொரோனா நோயாளிகள் 55 ஆயிரம் பேரின் தரவுகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, டிசம்பர் 11-ந் தேதியில் இருந்து ஜனவரி 29-ந் தேதி வரையில் பெறப்பட்ட 1,100 நோயாளிகளின் தரவுகளையும் ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

    கொரோனா வைரஸ் அறிகுறிகள் வரிசையை இன்புளூவென்சாவுடன் ஒப்பிடுவதற்காக, 1994-1998 கால கட்டத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து இன்புளூவென்சா தொடர்பாக பெறப்பட்ட 2,470 நோயாளிகளின் தரவுகளையும் பயன்படுத்தி உள்ளனர்.

    ஆய்வுக்குழுவின் தலைவரான தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோசப் லார்சன் இதுபற்றி குறிப்பிடுகையில், “அறிகுறிகளின் வரிசை முக்கியமானது. ஒவ்வொரு நோயும் வித்தியாசமாக முன்னேறுகிறது என்பதை வைத்து, ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருக்கிறதா அல்லது வேறு நோய் இருக்கிறதா என விரைவாக டாக்டர்கள் அடையாளம் காண முடியும்” என்கிறார்.

    ஆய்வு முடிவில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:-

    * நோயாளிகளில் மிகச்சிறிய பகுதியினர் மட்டும்தான் ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கை ஆரம்ப அறிகுறியாக அனுபவித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படி வயிற்றுப்போக்கு அறிகுறி ஏற்படுவது கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதை குறிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு வயிற்றுப்போக்கை தொடர்ந்து நிமோனியா அல்லது சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது.

    * அதிகமாக ஆரம்பத்தில் கூறப்படுகிற அறிகுறி காய்ச்சல். அதைத் தொடர்ந்து இருமல் அல்லது சுவாச கோளாறு (டிஸ்ப்னியா) ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×