search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
    X
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

    பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் - சவுதி அரேபியா அதிரடி - முடிவுக்கு வந்த நட்பு

    பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவியும், கச்சா எண்ணெய் உதவியும் நிறுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.
    ரியாத்;

    பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்த நாடு சவுதி அரேபியா. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது.

    சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகித்து வருகிறது.

    இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். 

    பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.

    இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

    இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.

    மேலும், சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை.

    இது தொடர்பாக கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதி
    அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார். 

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய குரேஷி,’காஷ்மீர் விவகாரத்தில்
    நீங்கள் (சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு) இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன். 

    முகமது பின் சல்மான் மற்றும் நரேந்திர மோடி

    இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என நான் மீண்டும் மரியாதையுடன் கூறுகிறேன்’ என்றார்.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியின் இந்த கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும், ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலும் இருந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.

    இதன் மூலம் 3 பில்லியன் டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    2018 ஆம் ஆண்டு அறிவிப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சவுதி அரேபியா-பாகிஸ்தான் நட்பு முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×