search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமலா ஹாரிஸ்
    X
    கமலா ஹாரிஸ்

    துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் - ஜோ பிடன் அறிவிப்பு

    ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக நடந்த ஓட்டெடுப்புகளில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார். இதனால் அவர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் கருப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அதே சமயம் தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் ஜோ பிடன் தீவிரம் காட்டி வந்தார்.

    துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் ஜோ பிடன் கவனம் செலுத்தினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர்.

    இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீசை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என பதிவிட்டுள்ளார்.

    துணை அதிபர் வேட்பாளராக என்னை ஜோபிடன் அறிவித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×