search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய அதிபர் புதின்
    X
    ரஷிய அதிபர் புதின்

    கொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா? தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா?

    கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசியின் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.
    மாஸ்கோ:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை திருடுவதாக இந்த வல்லரசு நாடுகள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையில், நாடுகள் கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசி 3 கட்ட மனித சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், 3 ஆம் கட்ட பரிசோதனை குறைந்தது 1 மாதங்களுக்கு மேலான பரிசோதனையாக இருக்க வேண்டும் எனவும் 1,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் செயல்திறன் தொடர்பாக முழுமையான வெற்றி பெற்றிருக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது.
       
    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருந்த ரஷியா உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம், இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என ரஷிய அதிபர் புதின் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஹமலியா ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதிபர் புதினின் அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தடுப்பூசி கண்டுபிடிப்பின் இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தது நாங்கள் தான் என கூறவே அவசர அவசரமாக ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அரசு தொடர்பான விடீயோ கான்பரன்ஸ் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். 

    அந்த கூட்டத்தில் புதின் பேசியதாவது:-

    உலகில் முதல் முறையாக இன்று காலை (ஆகஸ்ட் 11) கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை உருவாக்க பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் இது மிகவும் முக்கியமான தருணம்.

    தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது, வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன். நான் மீண்டும் கூறுகிறேன் இந்த தடுப்பூசி தேவையான அனைத்து ஆய்வுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

    எனது மகளுக்கும் இந்த தடுப்பூசி பரிசோதனை பங்குபெற்றார் (மரியா, கத்திரினா ஆகிய இரண்டு மகள்களில் யார் பங்குபெற்றார் என தெரிவிக்கவில்லை). தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளன்று எனது மகளின் உடல் வெப்பநிலை 100.4 பரன்ஹீட் என்ற அளவில் இருந்தது. 

    ஆனால் தடுப்பூசி செலுத்திய மறு நாள் அவரது உடல் வெப்பநிலை 98.6 பரன்ஹீட் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. மேலும், ஒரு முறை அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் சற்று வெப்பநிலை அதிகரித்தபோது பின்னர் பூரண உடல்நலம் கிடைத்துவிட்டது.

    அவர் நன்றாக உணர்கிறார். மேலும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

    என புதின் தெரிவித்தார்.

    மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவது தொடர்பான முழுமையான திட்டத்தை தயாரிப்பது தொடர்பான தகவல்களை தன்னிடம் அளிக்குமாறு சுகாதாரத்துறை மந்திரி மிஹேல் மோஷ்கோவிற்கு அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும், இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் ரஷிய சுகாதாரத்துறை மந்திரி சமீபத்தில் கூறுகையில், மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் எனவும், மருத்துவத்துறையினர், அரசுத்துறையினருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

    உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் 100-க்கும் அதிகமான தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. அவற்றில் குறைந்தது 4 தடுப்பூசிகள் இறுதிகட்டமான 3-ம் கட்ட மனிதபரிசோதனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×