search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நடப்பு ஆண்டு இறுதியில் உலகளவில் தடுப்பூசி கிடைக்கும் - அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தகவல்

    நடப்பு ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, உலகளவில் கிடைக்கும் என அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
    வாஷிங்டன்:

    உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1 கோடியே 57 லட்சத்து 59 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 6 லட்சத்து 40 ஆயிரத்து 253 பேர் அந்த வைரஸ் தொற்றுக்கு இரையாகியும் உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகளை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் உலகளவில் மருந்து நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி நிலவுகின்றன.

    இது தொடர்பாக அமெரிக்காவில் எரிசக்தி மற்றும் வர்த்தக கமிட்டி உறுப்பினர்களை அமெரிக்க மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

    ‘ஒரு தடுப்பூசிக்கான பாதை- பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அணுகக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க முயற்சிகள்’ என்ற தலைப்பில் அவர்களது விவாதம் அமைந்தது.

    அப்போது மருந்து நிறுவனங்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகள் உண்மையிலேயே இதுவரை நடந்திராதவை மற்றும் உலகளவிலான மருந்து நிறுவனங்களின் முன்மாதிரியான பணிகளை குறிக்கின்றன என தெரிவித்தன.

    இதில் கலந்து கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சூசன் டபிள்யு புரூக்ஸ், விவாதம் பற்றி கூறுகையில், “இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மருந்து நிறுவன பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு பாதுகாப்பானதும், பயனுள்ளதுமான தடுப்பூசியை உருவாக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு நிறுவனமும் நடப்பு ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு தடுப்பூசியை உருவாக்கி கொண்டு வருவதற்கான சாதனை படைக்கும் வேகத்தில் உள்ளது” என குறிப்பிட்டார்.

    இந்த விவாதத்தில் அஸ்ட்ரா ஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க், மாடர்னா, பைஸர் டாகின் ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அமெரிக்க மருந்து நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், கொரோனா தடுப்பூசி, சிகிச்சைகளை உருவாக்குவதற்கு ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு’ என்ற பெயரில் அதிவிரைவு திட்டத்தை தீட்டி, அதை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×