search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி சோதனை
    X
    தடுப்பூசி சோதனை

    சீனாவில் தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடந்தது

    சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின்போது, தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தி தூண்டுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங் :

    உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, அமெரிக்கா, சீனா என பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில் பல நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

    இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் நிலைக்கு வந்துள்ளன.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை உலகுக்கு வழங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சீனாவிலும் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடந்துள்ளது. அதில் தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுகிறது என தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கூறுகையில், “சீன தடுப்பூசி 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினை கொண்ட ஒரு சிறிய குழுவினருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச்சக்தியை மதிப்பிடுவதற்காக 2-வது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புசக்தியை தூண்டுகிறது என தெரிய வந்துள்ளது” என்றனர்.

    மேலும், தடுப்பூசி போடப்பட்ட பின்னர், போட்டுக்கொண்ட நபர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

    இந்த தடுப்பூசி, பலவீனமான ஜலதோஷ வைரசை (மனித செல்களை உடனடியாக பாதித்தாலும், நோயை ஏற்படுத்த இயலாத அடினோ வைரஸ்) அடிப்படையாக கொண்டது. இதன்மூலம் ஸ்பைக் புரதம் உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்பைக் புரதம், உடலின் நிணநீர் மண்டலங்களுக்கு பயணிக்கிறது. அங்கு நோய் எதிர்ப்பு அமைப்பு, ஆன்டிபாடிகளை (நோய் எதிர்ப்புச்சக்தி) உருவாக்குகிறது. இந்த ஆன்டிபாடிகள், ஸ்பைக் புரதத்தை அங்கீகரித்து, கொரோனா வைரசை அழிக்கும் வேலையை செய்கிறது.

    இந்த தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனையின்போது, 508 பேர் பங்கேற்றுள்னர். அவர்களில் 253 பேருக்கு அதிகளவில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. 129 பேருக்கு குறைந்த அளவு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது. 126 பேருக்கு மருந்து போலி தரப்பட்டது.

    சோதனையில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரு பங்கினர் 18-44 வயதினர், நான்கில் ஒரு பங்கினர் 45-54 வயதினர், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 13 சதவீதத்தினர் ஆவர்.

    தடுப்பூசி செலுத்தி, 30 நிமிடங்களுக்கு உடனடி பாதக எதிர்விளைவு ஏற்படுகிறதா என கண்காணிக்கப்பட்டனர். மேலும் ஆன்டிபாடிகளை கணக்கிடுவதற்காக தடுப்பூசிக்கு பிந்தைய 14 மற்றும் 28 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டனர்.

    அதில், அதிகளவு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களில் 95 சதவீதத்தினர் (253 பேரில் 241 பேர்), குறைவான மருந்து செலுத்தப்பட்டவர்களில் 91 சதவீதத்தினர் (129 பேரில் 118 பேர்), டி செல்கள் அல்லது ஆன்டிபாடிகளை 28-வது நாளில் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    மருந்து போலி பெற்றவர்களை விட தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி ஏற்பட்டது.

    ஆனாலும் இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், “பெரும்பாலான பாதகமான எதிர்வினைகள் லேசானவை அல்லது மிதமானவை” என குறிப்பிட்டனர்.
    Next Story
    ×