search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்

    இமயம் முதல் தென் சீனக் கடல் வரை சீனாவுக்கு எதிராக நட்பு நாடுகளுக்கு துணை நிற்போம்- அமெரிக்கா

    சீனாவின் ஆதிக்கம் உள்ள இமயம் முதல் தென்சீனக் கடல் வரை நட்பு நாடுகளுக்கு துணை நிற்பதாக அமெரிக்கா கூறி உள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பதிலடிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    இதேபோல் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு பக்கபலமாக இருப்பதாகவும் கூறிவருகிறது.

    இந்தியா மற்றும் சீனா இடையே அமைதி நிலவுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரட்ப் ஏற்கனவே  கூறியிருந்தார். குறிப்பாக கடந்த பல வாரங்களாக, டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வருகிறது. 

    இந்நிலையில், சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்க கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவுடன் வலுவாக துணை நிற்பதாக டிரம்ப் நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

    தென் சீனக் கடலில் இருந்தாலும், இமயமலையில் இருந்தாலும், சீனாவின் ஆக்ரோஷ போர்க்குணத்தை எதிர்கொண்டு, இறையாண்மையை நிலைநிறுத்துவதில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு துணை நிற்கும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ஆணையம் (எஸ்சிஏ) தெரிவித்துள்ளது. 

    ‘எங்கள் முக்கிய நலன்களையும் எங்கள் கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. எங்கள் ராணுவ திறன்களை உருவாக்குகிறோம். விழிப்புடன் இருக்கிறோம். சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறோம்’ என எஸ்சிஏ துணை செயலாளர் ஸ்டில்வெல் கூறி உள்ளார்.
    Next Story
    ×