search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார நிறுவனம்
    X
    உலக சுகாதார நிறுவனம்

    உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்

    உலக சுகாதார நிறுவனத்தின் 2 நிபுணர்கள் சீனாவுக்கு விரைந்துள்ளனர். அவர்கள் கொரோனாவின் தோற்றம் பற்றி அடுத்த 2 நாட்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.
    பீஜிங்:

    கொரோனா வைரஸ் தொற்று உலகை கலங்கடித்து வருகிறது. ஆனால் அதன் தோற்றம் பற்றி இன்னும் சர்ச்சை தொடர்கிறது.

    கொரோனா வைரஸ், வவ்வால்களில் தோன்றி இருக்கலாம்; பின்னர் அது புனுகுப்பூனை அல்லது எறும்புண்ணி போன்றவற்றின் மூலம் வுகான் நகர சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

    மேலும் அங்கிருந்து பரவுவதை தடுக்கும் விதத்தில் வன விலங்கு வர்த்தகத்தை குறைத்ததுடன், மாமிச சந்தைகளை சீனா மூடியது. கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து புதிய பரவல்களை கட்டுப்படுத்தி உள்ளது.

    இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரம், அரசியலாகி உள்ளது.

    இதில் சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் சேர்ந்து கொண்டு இந்த தொற்று பரவலை தவறாக கையாண்டது, சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சுமத்தி, அந்த அமைப்புடனான உறவை துண்டித்து விட்டது.

    120-க்கும் மேற்பட்ட உலக நாடுகள், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒருமித்த குரலில் கடந்த மே மாதம் உலக சுகாதார சபையில் கோரிக்கை வைத்தனர். உலக சுகாதார நிறுவனம் இந்த விசாரணையை வழிநடத்த வேண்டும் என்று சீனா கூறியது.

    இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் 2 பேர் சீனா விரைந்துள்ளனர். அவர்களில் ஒருவர், விலங்கு சுகாதார நிபுணர். மற்றொருவர், தொற்றுநோயியல் நிபுணர்.

    இவர்கள் 2 பேரும் அடுத்த 2 நாட்கள் சீன தலைநகர் பீஜிங்கில் தங்கி இருந்து கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான ஒரு பெரிய பணிக்கான அடித்தளத்தை அமைப்பார்கள்.

    இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “விலங்குகளிடம் இருந்து வைரஸ் எப்படி மனிதர்களுக்கு தாவியது என்பதை கற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்ட எதிர் கால பணிக்கான நோக்கம் மற்றும் குறிப்பு விதிமுறைகளை இவர்கள் 2 பேரும் உருவாக்குவார்கள்” என கூறப்பட்டுள்ளது.

    கடைசியாக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, கடந்த பிப்ரவரி மாதம் சீனா சென்றது. அந்த குழுவின் தலைவரான கனடா டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு, கொரோனா வைரஸ் தொற்றை கட்டப்படுத்த சீனா சரியான முயற்சிகளை எடுத்ததாக பாராட்டு பத்திரம் வாசித்தார். அதற்காக அவரை அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×