search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாவோ லிஜியான்
    X
    ஜாவோ லிஜியான்

    லடாக் பிரச்சனை: இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்- சீனா

    கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.
    பீஜிங் :

    கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், எல்லை முழுவதும் போர் மேகமும் சூழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருநாட்டு எல்லை பேச்சுவார்த்தையின் சிறப்பு பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.

    இதில் எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமுக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிக்ங், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறி வருவதுடன், அங்கு நிறுவிய கட்டுமானங்களையும் அகற்றி வருகின்றனர்.

    இந்த படை விலக்கும் நடவடிக்கைகளை சீனாவும் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இரு நாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லை முழுவதும் தற்போது நிலைமை சீராகவும், மேம்பட்டும் வருகிறது.

    ராணுவம் மற்றும் தூதரகம் ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்புகளை இரு தரப்பும் தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும் இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி நெறிமுறை சந்திப்பும் மேற்கொள்ளப்படும்.

    எல்லை முழுவதும் பதற்ற தணிப்புக்கான ஒருமித்த முடிவுகளை அமல்படுத்துவதிலும், அங்கு அமைதியை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் எங்களுடன் இணைந்து இந்தியாவும் பணியாற்றும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.
    Next Story
    ×