search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல் சாப்பாடு - கோப்புப்படம்
    X
    ஓட்டல் சாப்பாடு - கோப்புப்படம்

    எந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி - அதிரடி சலுகையை அறிவித்த நாடு

    இங்கிலாந்தில் எந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி என இங்கிலாந்து அரசு அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை உணவகங்களில் இருந்து உணவருந்தும் அனைவரின் 50 சதவிகித கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    சிறுவர்கள் உள்பட அனைவருக்கும் அதிகபட்சம் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும் வகையில் இந்த புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு அமுலுக்கு கொண்டுவர உள்ளது. அதாவது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பமானது 80 பவுண்டு தொகைக்கு உணவருந்தினால், 40 பவுண்டுகள் மட்டும் செலுத்தினால் போதுமானது.

    சேன்ஸலர் ரிஷி சுனாக்


    நாட்டின் மொத்த குடிமக்களுக்கும் பயன் தரும் திட்டம் இதுவென சேன்ஸலர் ரிஷி சுனாக் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் உணவகங்கள் வழியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரப்படும். பொதுமக்களுக்கு தள்ளுபடியாக வழங்கும் தொகையானது, ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்குகளில் 5 நாட்களுக்குள் அரசு செலுத்தும்.

    உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவையில் பணியாற்றும் 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் திட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திலும் 5 லட்சம் பவுண்டு வரையான சொத்துக்களுக்கு அடுத்த ஆண்டு மார் 31 வரை முத்திரை வரியை அரசு ரத்து செய்துள்ளது.

    விருந்தோம்பல் மற்றும் தங்குமிடங்களுக்கான மதிப்பு கூட்டு வரிகளை 20 சதவீதத்தில் இருந்து மிகக் குறைவாக 5 சதவீதமாக திருத்தியுள்ளது.எதிர்வரும் புதன்கிழமை தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை இது அமுலில் இருக்கும். இதனால் உணவகங்கள், மதுபான விடுதிகள், கபே உள்ளிட்டவைகள் சரிவில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.

    18-24 வயதுடைய பயிற்சி பெறுபவரை பணியமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 1,000 பவுண்டுகள் ரொக்க போனஸ் கிடைக்கும் என்பதை சேன்ஸலர் ரிஷி உறுதி செய்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை சுற்றுச்சூழல் நட்புறவாக மாற்ற 5,000 பவுண்டுகள் வரை மானியம் பெறும் திட்டமும் அமுலுக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஏழ்மையான சில குடும்பங்களுக்கு 10,000 பவுண்டுகள் வரை மதிப்புள்ள வவுச்சர்கள் பெற்றுக்கொள்ளும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×