search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது - நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் தொற்று நோய் மோசமாக பாதித்துள்ள 10 நாடுகளில் இங்கிலாந்து 7-வது இடத்தில் இருக்கிறது. அங்கு 2 லட்சத்து 87 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதிப்புள்ள நிலையில், 44 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் வரையில் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதில் இங்கிலாந்து மிகவும் பின்தங்கி இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

    இது குறித்து நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியும், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான இங்கிலாந்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் தலைவரும், ராயல் சொசைட்டியின் தலைவருமான பேராசிரியர் வெங்கி என்ற வெங்கடராமன் ராமகிருஷ்ணன் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியர் வெங்கி என்ற வெங்கடராமன் ராமகிருஷ்ணன்


    முகத்தை மறைக்காமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கடினமாக உள்ள இந்த நேரத்தில் கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

    முக கவசம் அணிவதிலும், அதையொட்டிய தெளிவான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு வழங்குவதிலும் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் பின்தங்கி உள்ளது.

    பொதுமக்கள் கை கழுவுகின்றனர். தனிமனித இடைவெளியை பின்பற்றுகின்றனர். ஆனால் முகத்தை மறைப்பது இல்லை.

    வீட்டில் இருந்து வெளியே வந்து பானங்கள் பருகுவதுவரை கொஞ்சம் இயல்பாக இருக்கிறது. இருக்கை பெல்ட்டுகளை அணியாமல்கூட வாகனம் ஓட்டுவது சாதாரணமாக ஆகி இருக்கிறது. ஆனால் இது சமூகத்துக்கு எதிரானது. அதே போன்றுதான் முக கவசம் அணியாமல் இருப்பதுவும் கருதப்பட வேண்டும்.

    இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை தடுக்க வேண்டும் என்றால், கை கழுவுவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், முக கவசம் அணிவதும் சம அளவில் முக்கியமானது. இது அவர்களுக்கு மட்டுமல்ல, அதே அளவில் மற்றவர்களுக்கும் முக்கியமானது.

    தனிமனித இடைவெளியை பின்பற்ற இயலாத சூழலில் முக கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும். இது செய்ய வேண்டிய சரியான செயல். தொற்றுகளை குறைக்க உதவுவதுடன், தொற்று நோய்க்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகள் திறந்திருக்கவும், ஒரு சிறிய விலை கொடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் வேளையிலும், பொதுமக்களில் குறைந்த அளவினரே முக கவசம் அணிந்து வெளியே வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் முக கவசம் அணிவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 
    Next Story
    ×