search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா

    தென்சீன கடலில் சீன ராணுவம் மேற்கொண்டுவரும் போர் பயிற்சி நடைபெறும் பகுதிக்கு அமெரிக்கா விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இதனால் தென்சீன கடல் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
    வாஷிங்டன்:

    தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிவருகிறது.      
     
    இதற்கிடையில், தென்சீன கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பகுதிகள் சர்வதேச கடல்பகுதியாகும். 

    இதனால் அப்பகுதியில் உள்ள அண்டை நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் சீனாவின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வரும் தென்சீன கடற்பரப்பிற்கு 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. 

    இந்த இரண்டு போர் கப்பல்களும் தென்சீன கடல் பரப்பில் போர் பயிற்சியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இடத்தில் அமெரிக்கா போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

    கோப்பு படம்

    ஒரு வேளை சீனா பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே அமெரிக்கா போர் பயிற்சி மேற்கொண்டால் இரு நாடுகளுக்கும் இடையே போர் கூட ஏற்படலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

    பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிபடுத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என்பதை எங்கள் கூட்டணி நாடுகளுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு துணை நிற்கும் விதமாகவும் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க போர் கப்பலின் அட்மிரல் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    1,500 கிலோ மீட்டர்கள் பரப்பளவை கொண்ட தென்சீன கடற்பரப்பின் 90 சதவிகிதத்தை சீனா தனக்கு சொந்தமானது என உரிமைகோரி வருகிறது. சர்வதேச கடல் எல்லையை தன்னுடைய பகுதி என உரிமைகோரும் சீனாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதால் தென்சீன கடல் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
      

    Next Story
    ×