search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகள்
    X
    சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகள்

    போலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகள்

    துபாயில் போலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    துபாய்:

    துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த சிறுவனுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்தால் பயம். சிறு வயதில் இருந்தே போலீசாரை பார்த்தால் மிரண்டு பயந்து ஓடி ஒளிந்துகொண்டுள்ளான். அவனது பெற்றோர் எவ்வளவோ முயன்றும் அவனுக்கு பயம் தெளியவில்லை. இதனால், எதிர்காலத்தில் தனது மகனுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, தங்கள் மகனின் பயத்தை போக்க வேண்டும் என்று போலீஸ்துறைக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸ்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரிவு இயக்குனர் புத்தி அல் பலாசி தலைமையில் தனிப்படையினர் சிறுவன் வீட்டிற்கே சென்றனர். அந்த குழுவில் பெண் போலீசாரின் கார்ட்டூன் கதாபாத்திரம் போல வேடமணிந்த வீரரும் சென்றார். அவர்கள் கையோடு சிறுவனுக்கு போலீஸ் சீருடை, விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் சிறுவனிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். பிறகு அவனுக்கு அந்த உடையை அணிய வைத்து பாராட்டினர்.

    பிறகு அந்த சிறுவனை துபாயில் உள்ள ஸ்மார்ட் போலீஸ் நிலையத்திற்கு பெற்றோருடன் அழைத்து சென்று சுற்றி காட்டினர். சிறுவன் சகஜமாக அவர்களுடன் பழகினான். பிறகு அந்த சிறுவனுக்கு பரிசுபொருட்கள் மற்றும் நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர். பயம் நீங்கிய சிறுவன் புன்னகை புரிந்ததும் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் துபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    Next Story
    ×