search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன வெளியுறவுத்துறை துறை செய்தி தொடர்பாளர் ஜியாவோ லிஜியன்
    X
    சீன வெளியுறவுத்துறை துறை செய்தி தொடர்பாளர் ஜியாவோ லிஜியன்

    பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கை கூடாது- மோடியின் லடாக் பயணத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா

    மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ததுடன், பின்னர் ராணுவ வீரர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார்.
    பீஜிங்:

    லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. பதற்றத்தை தணிக்க இருதரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். எந்த முன் அறிவிப்பும் இன்றி சென்ற அவருடன் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றனர். 

    லடாக்கில் ராணுவ வீரர்களுடன் மோடி

    கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக்கின் நிம்மு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்வானில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் ராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.

    பிரதமர் மோடியின் இந்த லடாக் பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை துறை செய்தி தொடர்பாளர் ஜியாவோ லிஜியன் கூறியதாவது:- 

    இந்தியாவும் சீனாவும் ராணுவ அதிகாரிகள் வாயிலாகவும், ராஜாங்க ரீதியிலும் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த சமயத்தில், எந்த தரப்பும் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×