search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார நிறுவனம்
    X
    உலக சுகாதார நிறுவனம்

    சீனாவின் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்

    கொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.
    மாஸ்கோ:

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னும் உலகம் விடுபட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் உலக நாடுகள் இந்த வைரசின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றன. தினமும் லட்சக்கணக்கானோருக்கு புதிது புதிதாக தொற்று பரவுகிறது. பல்லாயிரக்கணக்கானோரை உயிரிழக்க வைக்கிறது.

    நேற்று மதிய நிலவரப்படி இந்த கொரோனா வைரஸ் தொற்று, உலகமெங்கும் ஏறத்தாழ 1 கோடியே 5 லட்சம் பேரை பாதித்துள்ளது. 5 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு அதிகமானோரின் உயிரையும் பறித்து விட்டது.

    இந்த வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுத்து நிறுத்தவும் ஒரு தடுப்பூசி இன்று வரை சந்தைக்கு வரவில்லை.

    இப்படி கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடி கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி மனித குலத்தை மீண்டும் கவலையில் ஆழ்த்தி உள்ளன.

    இந்த வைரஸ், பன்றிகளிடையே பரவி மனிதர்களையும் தாக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த வைரசை பொறுத்தமட்டில் உடனடியாக மனிதர்களை தாக்கும் ஆபத்து இல்லை என்று சொல்லப்பட்டாலும்கூட, இது கொரோனா வைரஸ் தொற்று போல மாறும் அச்சுறுத்தல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவும் புதிய வைரசாக இருப்பதால் இதற்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி மனிதர்களுக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்களை பெறவும், ஒருங்கிணைந்து செயல்படவும் சீனாவை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.

    இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தாகேஷி கசாய் நேற்று கூறியதாவது:-

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ், பன்றிக்காய்ச்சல் வைரசின் திரிபு என கூறப்படுவதால், இது தொற்று நோயாக மாறுகிற அபாயங்கள் உள்ளது. இது குறித்து மதிப்பிடுவதற்கு சீனாவின் ஒருங்கிணைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.

    தற்போது கிடைத்துள்ள தகவல்கள், நிலைமையை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை. இந்த புதிய நிகழ்வில், சரியான இடர் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டமைக்கப்பட்ட திறனை, எதிர்காலத்தில் இன்புளூவென்சா தொற்று நோய்களுக்கு தீர்வு காண்பதற்கும் பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×