search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீனாவில் மேலும் 29 பேருக்கு புதிதாக கொரோனா

    சீனாவில் நேற்று முன்தினம் புதிதாக 29 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்தது.
    பீஜிங்:

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று வெளிப்படத்தொடங்கியது. அது ஏப்ரல் மாதம் கட்டுக்குள் வந்தது. இயல்பு வாழ்க்கையும் தொடங்கியது.

    ஆனால் கடந்த 11-ந் தேதியில் இருந்து தலைநகரான பீஜிங்கிலும், பிற நகரங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று கொத்து கொத்தாக பரவத்தொடங்கியது.

    பீஜிங் நகரில் உள்ள ஜின்பாடி மொத்த சந்தையில் சால்மன் மீன்கள் வெட்டும் பலகையில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு தொற்று தீவிரமாக பரவத்தொடங்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் ஊரடங்கு போடப்பட்டு போர்க்கால நிலைமையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் நேற்று முன்தினம் புதிதாக 29 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்தது.

    அவர்களில் 13 பேர் தலைநகர் பீஜிங்கை சேர்ந்தவர்கள். 7 பேர் எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். நேற்றுமுன்தினம் நிலவரப்படி, அங்கு 99 பேர் அறிகுறிகள் இன்றி தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பீஜிங்கில் லட்சக்கணக்கானோருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரையில் பீஜிங்கில் 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருந்துதான் இவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. 22 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று பரவல் உள்ளது.

    இதுபற்றி பீஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை பீஜிங் திறம்பட கட்டுப்படுத்தி உள்ளது. புதிதாக தொற்று பரவுவது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்” என குறிப்பிட்டார்.

    அடுத்தபடியாக, உணவகங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் உருவாக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை பீஜிங் நகர நிர்வாகம் நடைமுறைப்படுத்தும்; உணவு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்படும். நியூக்ளிக் அமில சோதனைத்திறன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தேசிய சுகாதார கமிஷனின் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் வு ஹாவ் கூறுகையில், “இந்த வாரம் பீஜிங்கில் தொற்று பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

    சீனாவில் தற்போது தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 418 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 4,634 ஆகும். சிகிச்சைக்கு பின்னர் 78 ஆயிரத்து 425 பேர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
    Next Story
    ×