search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார நிறுவனம்
    X
    உலக சுகாதார நிறுவனம்

    கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?- உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது

    கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் உச்சம் தொடும் வேளையில், அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது.
    ஜெனீவா:

    உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் பரவல் பற்றி அவர் சில கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் பல நாடுகளில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. இது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை இன்னும் உலகின் பெரும்பாலான நாடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது. (உலகளாவிய தெற்கு நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பிடித்துள்ளன.)

    ஐரோப்பாவின் சில நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், வடஅமெரிக்கா ஆகியவை நோய் தொற்றின் உச்சத்தில் இருக்கின்றன.

    சில நாடுகள், பொது முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடுகின்றன. மக்கள் மீண்டும் சமூகத்தில் கலக்கிறார்கள். ஆனால் தனி மனித இடைவெளியை போதுமான அளவுக்கு கடைப்பிடிக்க வேண்டும், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இதைப் பார்க்க முடியவில்லை.

    போதுமான அளவுக்கு பரிசோதனைகளை செய்யவும், தொற்று சந்தேகத்துக்கு உரியவர்களை தனிமைப்படுத்தவும், தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் போதுமான திறன் இல்லை என்றால், கொரோனா தொற்று மீண்டும் வரக்கூடும்.

    இதற்கிடையே, ஊரடங்கில் இருந்து வெளியே வருகிற எந்தவொரு நாட்டிலும் நோய் கொத்துகள் எற்படுவதும், மீண்டும் நோய் பரவுவதும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்றாக இல்லை. இது இரண்டாவது அலையாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

    அனைவரையும் வீட்டிலேயே வைத்திருப்பதற்கும், கொரோனா தொற்றை முழுமையாக அடக்குவதற்கும் இடையே கவனமான சம நிலை இருக்க வேண்டும். ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கவனமாக நிர்வகித்து சமப்படுத்த வேண்டும்.

    அது, உண்மையில் உங்கள் பொது சுகாதார கண்காணிப்பின் நுட்பமான தன்மை, சோதனை, கண்காணிப்பு மற்றும் தடம் அறியும் திறன், சமூகங்கள் வழியாக பரவி வரும் வைரசைப்பற்றிய உங்கள் அறிவு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான உங்கள் திறன் ஆகியவற்றின் கீழே வருகிறது.

    நீங்கள் நினைத்தபடி பொத்தாம்பொதுவாக நடவடிக்கைகள் எடுத்து விட முடியாது. நல்ல தரவுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். நல்ல தரவுகள் இன்றி, அது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை.

    சில நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதில் சிரமங்கள் இருப்பதை அறிந்து உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டிருக்கிறது. இதில் கேள்வி என்னவென்றால், ஊரடங்கில் இருந்து வெளியே வர என்ன திட்டத்தை மாற்றாக வைத்திருக்கிறீர்கள்? தடுப்பூசி இல்லாத நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது? சமூகங்களுடன் நல்ல பொதுசுகாதார கண்காணிப்பு உறவு இருக்கிறதா? அப்படி இருக்கிறபட்சத்தில், தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது அவர்களுக்கு தெரியும்.

    ஆனால் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? எந்தவொரு சூழ்நிலையிலும், அதை அடைவது கடினம். ஆனால் அடுத்து வரும் மாதங்களை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழி இதுதான். நாம் தொற்றை தடுப்பதற்கான மற்ற தலையீடுகளுக்காக காத்திருக்கிறோம்.

    அதுவரை வைரஸ் தொற்றுடன் வாழ்வதற்கு கற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். வைரசைக் கட்டுப்படுத்துவதில் சமநிலையை கண்டறிய வேண்டும். இது கடினமான சங்கடம்தான். ஆனால் நாம் அதை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×