search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள பாராளுமன்ற கூட்டம்
    X
    நேபாள பாராளுமன்ற கூட்டம்

    இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

    இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
    காத்மாண்டு:

    இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார்.

    நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பாராளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதால் விவாதம் நடைபெறவில்லை. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முதலில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெறுகிறது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    275 உறுப்பினர்கள் கொண்ட சபையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மசோதா நிறைவேறும். பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், மேல் சபையான தேசிய சபைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அங்கும் இதேபோன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். தேசிய சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டமாக்கப்படும்.
    Next Story
    ×