search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோக்கிய சேது செயலி
    X
    ஆரோக்கிய சேது செயலி

    கொரோனாவுக்கு எதிரான போரில் ஆரோக்கிய சேது செயலிக்கு முக்கிய பங்கு - ஐ.நா. இந்திய துணைத்தூதர்

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், தொடர்பு தடம் கண்டறிவதில் ஆரோக்கிய சேது செயலி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஐ.நா. சபையில் இந்திய துணைத்தூதர் பேசினார்.
    நியுயார்க்:

    கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், இந்த உலகையே கலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகமெங்கும் 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. 4 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்று பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.

    உலகளவில் அமெரிக்காதான் பிற நாடுகளை விட மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

    இந்த நேரத்தில், நியுயார்க் நகரில் ஐ.நா. சபை தலைமையகத்தில், நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக உயர் மட்ட விவாதம் ஒன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் சார்பில், துணைத்தூதர் நாகராஜ் நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இப்போது கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த வேளையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்), தொடர்புகளை கண்டுபிடிக்கும் செயலிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன” என கூறினார்.

    துணைத்தூதர் நாகராஜ் நாயுடு

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்பு தடம் அறிய பயன்பாட்டில் உள்ள ஆரோக்கிய சேது செயலி பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தொடர்புகளை கண்டுபிடிப்பதில் விரைவான வளர்ச்சிக்கு ஆரோக்கிய சேது செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், புதுயையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கொரோனா பரிசோதனை கருவிகள், இந்த தொற்று நோயை கையாள்வதற்கு இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவி வருகின்றன.

    ஆரோக்கிய சேது செயலியை இந்திய அரசு ஏப்ரல் 2-ந் தேதி அறிமுக்படுத்தியது. இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை மதிப்பிடுவதற்கும், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புக்கு வந்தால், அதிகாரிகளை உஷார்படுத்தவும் உதவுகிறது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களை பதிவு செய்ய உதவுகிறது.


    12 மொழிகள் மற்றும் பல்வேறு தளங்களில் இந்த பயன்பாடு கிடைக்கிறது. இதை இந்தியாவில் மே மாதம் 26-ந் தேதி நிலவரப்படி 11 கோடியே 40 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இது உலகளவில் பிற எந்த தொடர்பு தடமறிதல் பயன்பாட்டையும் விட அதிகம்.

    ஒரு புதிய தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்த உடன், நீங்கள் அதன் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், நீங்கள் தட்டையான சாலையில் ஒரு பகுதியாகத்தான் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இருந்தபோதிலும், சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தரவு தனி உரிமை, தவறான தகவல் பரவல் ஆகியற்றில் எழுகின்ற சிக்கல்களை கையாள்கிற வேண்டியது இருக்கிறது.

    புதிய தொழில் நுட்பங்கள் நம்ப முடியாத வாக்குறுதியை வழங்குகின்றன. உணவு பாதுகாப்பு தொடங்கி உலகளாவிய உற்பத்தி வினியோக சங்கிலிகளின் செயல்திறனை மேம்படுத்துதல் அல்லது புதிய மருந்துகள் அல்லது புதிய பொருட்கள் கண்டுபிடித்தல் போன்றவற்றில் புதிய தொழில் நுட்பங்கள் நம்ப முடியாத வாக்குறுதிகளை வழங்குகின்றன.

    அதே நேரத்தில் புதிய தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கையும், ஏற்றுக்கொள்ளும் சிக்கல்களும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசும்போது, “ கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பதிலளிப்பில், ஒவ்வொரு அம்சத்திலும் டிஜிட்டல் தொழில் நுட்பம் முக்கியமானது. தடுப்பூசி ஆராய்ச்சி முதல், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் கல்வி வரை கோடிக்கணக்கானோர் வீட்டில் இருந்து கொண்டே தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×