search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐநா சபைக்கான இந்திய தூதர் திருமூர்த்தி
    X
    ஐநா சபைக்கான இந்திய தூதர் திருமூர்த்தி

    வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கொரோனா நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்- ஐ.நா சபையில் இந்திய தூதர் கன்னிப்பேச்சு

    ஐ.நா.சபையில் இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ள திருமூர்த்தி கன்னிப்பேச்சு பேசினார். அவர், வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கொரோனா வைரஸ் தொற்று நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறினார்.
    நியூயார்க்:

    ஐ.நா.சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக (தூதராக) நியமிக்கப்பட்டிருப்பவர், சென்னை தமிழர் டி.எஸ்.திருமூர்த்தி. இவர் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மருமகன் ஆவார்.

    இவர் ஐ.நா.சபையில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் நிர்வாகக்குழுவின் 2020 அமர்வில் கலந்து கொண்டு முதல் முறையாக கன்னிப்பேச்சு பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் பிரச்சனையை எழுப்பி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று ஒரு சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது விரைவான பொருளாதார, சமூக மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேலும், இது வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

    கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிற இத்தகைய இடையூறுகளை, டிஜிட்டல் கருவிகள் இல்லாமல் உலகம் எவ்வாறு சமாளிக்கும் என்று கற்பனை செய்வது கடினம். எனவே தொழில் நுட்பம், டிஜிட்டல் மற்றும் மக்களை மையமாக கொண்ட தீர்வுகள், நமது வளர்ச்சி முன்னுதாரணத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும்.

    ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது டிஜிட்டல் முன் முயற்சிகளைப் பொறுத்தவரை, அதிக முன்னுரிமையைப் பெற வேண்டும்.

    கொரோனா வைரஸ் தொற்று நோயால் நாடுகள் சிக்கி திணறுகின்றன. உறுப்பு நாடுகளில் ஐ.நா.வளர்ச்சி திட்ட முன்னுரிமைகளுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய வளர்ச்சி முன்னுரிமைகளானது குறைந்தபட்சம், இந்த கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்கும்.

    2030-ம் ஆண்டு வளர்ச்சி இலக்கானது, நாடுகளுக்கு நீண்ட இலக்காக இருக்கிறது. குறுகிய கால மற்றும் நடுத்தர கால முன்னுரிமைகள் முரண்பாடாக இல்லாவிட்டாலும் சற்று வித்தியாசமாக இருக்கலாம். மாற்றப்பட்ட உடனடி முன்னுரிமைகளுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு ஐ.நா. வளர்ச்சி திட்டமானது, உறுப்பு நாடுகளுக்கு வேகமானதாக இருக்க வேண்டும்.

    தொற்று நோய் காலத்தில் வளர்ந்து வரும் நாடுகள் மாறுபட்ட அளவுகளில் பாதிக்கப்படக்கூடும். எனவே குறிப்பிட்ட முன்னுரிமை துறைகளில் கவனம் செலுத்துவது சம அளவுக்கு முக்கியமானது.

    சுற்றுலா போன்ற மிக மோசமான பாதிப்புக்குள்ளான துறைகள் இயற்கையாகவே சுகாதாரத்துறையில், சமூக பாதுகாப்பில் கவனம் செலுத்தும்.

    ஐ.நா. வளர்ச்சி திட்டமானது, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை தழுவுகிறது. ஆனால் உறுப்பு நாடுகளில் இதை பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

    சமீபத்திய ஆண்டுகளில் மக்களுக்கு உகந்த திட்டங்களை இந்தியா முழுமையாக மேற்கொண்டுள்ளது.

    கொரோனா வைரஸ் நெருக்கடி கூட்டாண்மைக்கான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. யாரும் விட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்து, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள கூட்டாளிகளுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வழங்குவதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளது.

    அத்தியாவசியமான மருந்துகளை வழங்கி இருக்கிறது. சோதனைக்கருவிகளை வழங்குகிறது. சுய பாதுகாப்பு கருவிகள் வழங்குகிறது. உடனடி பதிலளிப்பு குழுக்களை அனுப்பி வைக்கிறது. ஒரு தகவல் பரிமாற்ற தளத்தையும் உருவாக்கி உள்ளது. 
    Next Story
    ×