search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது என்பது ஆபத்தை மிக விரைவில் எளிதாக்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 2 மாதங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்படுகின்றன. இனி 2-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சந்திக்க முடியும், பள்ளிகள் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் தனி மனித இடைவெளிகளை தொடர்ந்து பின்பற்றுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    பிரதமர் போரிஸ் ஜான்சன்


    இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக்குழு, அதன் ரகசிய கூட்டங்களின் முடிவை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது என்பது ஆபத்தை மிக விரைவில் எளிதாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி பேராசிரியர் ஜான் எட்மண்ட்ஸ் கூறும்போது, “கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு அரசியல் முடிவு” என்று குறிப்பிட்டார். சர் ஜெரேமி பரார், “தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் சோதனை மற்றும் தடம் அறிதல் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    பேராசிரியர் பீட்டர் ஹார்பி, “கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சோதனை, சுவடு அறிதல், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் சரியான இடத்தில் இருக்க வேண்டும். முழுமையாக செயல்பட வேண்டும். பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் அவரது தொடர்புகளை கண்டுபிடிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    Next Story
    ×