search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    இந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு

    இந்தியா - சீனா எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    அருணாசல பிரதேசத்தை முழுவதுமாக சொந்தம் கொண்டாடும் சீனா, லடாக்கின் சில பகுதிகளையும் சொந்தம் கொண்டாடி வருகிறது. அதனால்தான், லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்தபோது, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

    கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரி அருகே பிங்கர் பகுதியில் இந்தியா முக்கியமான சாலை அமைத்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இணைப்பு சாலை ஒன்றையும் அமைத்து வருகிறது. இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த 5-ந்தேதி, கிழக்கு லடாக்கில் பங்காங் சோ ஏரி அருகே இந்திய - சீன படைகள் இடையே மோதல் நடந்தது.

    இரும்பு கம்பிகள், தடிகள் ஆகியவற்றை கொண்டு மோதினர். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில், இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பின்னர், 9-ந்தேதி சிக்கிம் மாநிலத்திலும் மோதல் நடந்தது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் படை பலத்தை அதிகரித்துள்ளன. அங்கு ரோந்து சுற்றி வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தியா - சீனா இடையே 3 ஆயிரத்து 488 கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகத்தான் எல்லை பகுதிகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி இருநாடுகளிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்து வந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×