search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    இவர் வழி தனி வழி... தொழிற்சாலை ஆய்வுக்கு மாஸ்க் அணியாமல் சென்ற டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்ப், மிச்சிகன் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையை ஆய்வு செய்ய சென்றபோது மாஸ்க் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கொரோனா வைரசின் உக்கிரம் தணியாத நிலையில், மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மிச்சிகன் மாநிலத்தில் வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போர்டு மோட்டார் கம்பெனியை பார்வையிடுவதற்காக அதிபர் டிரம்ப் சென்றார்.

    அப்போது அவருடன் சென்ற அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். ஆனால் டிரம்ப் மாஸ்க் அணியவில்லை. கம்பெனிக்குள் வருபவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் டிரம்ப் அதை பொருட்படுத்தவில்லை.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களை டிரம்ப் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

    டிரம்ப் வருகைக்கு முன்னர் பேசிய மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் டானா நெசல், மாநிலத்தின் சட்டத்தை பின்பற்றப்போவதில்லை என தெரிந்தால், எதிர்காலத்தில் அவரது வருகைக்கு தடை விதிக்கப்படும் என்றும், அவரை உள்ளே அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பணியாற்றிய 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிரம்புக்கும் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×