search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயற்கை சுவாசம் - கோப்புப்படம்
    X
    செயற்கை சுவாசம் - கோப்புப்படம்

    கொரோனா பாதிப்பால் 58 நாள் செயற்கை சுவாசத்துக்கு பின்னர் முதன்முதலாக பேசிய பெண்

    இங்கிலாந்து நாட்டில் 58 நாட்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையில், இந்திய டாக்டர் சிகிச்சையில் ஒரு கொரோனா நோயாளி குணம் அடைந்து வருகிறார். அவர் முதன் முதலாக பேசினார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் தெற்கு கடலோர நகரமான சவுதாம்ப்டன் பொது ஆஸ்பத்திரியில் 35 வயதான பெண், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவரது உடல்நிலை மோசமானதால் இவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு நாள் இரு நாள் அல்ல, 58 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது அபூர்வமாக குணம் அடைந்து வருகிறார்.

    அவர் முதன்முதலாக பேசினார். அவருக்கு இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவர் கூறியதாவது:-


    சவுதாம்ப்டன் பொது ஆஸ்பத்திரி - டாக்டர் சஞ்சய் குப்தா


    கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள 35 வயது பெண்ணுக்கு நான் சிகிச்சை அளித்து வருகிறேன். அவர் 58 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டு வருகிறார். அவர் இப்போது குணம் அடைந்து வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது. அவர் மிகவும் பலவீனமாக இருந்து வந்தார். ஒரு விரலை கூட உயர்த்த முடியாத நிலையில் இருந்தார். இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. அவர் இப்போது முதன்முதலாக பேசினார். அவரால் தகவல்கள் பரிமாற முடிகிறது.

    அவருக்கு தசைகளில் பலம் இல்லாமல் இருந்தது. ஒருவரை வெண்டிலேட்டரில் வைக்கிறபோது அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கிறபோது, எலும்பு தசைகள் சிதைந்து போகும்.

    அதுவே கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் என்கிறபோது, வெண்டிலேட்டரில் வைக்கிறபோது மரணம் ஏற்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்பு உண்டு என்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

    எனவே இந்தப் பெண் மீண்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்து இருக்கிறது.

    பொதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கிறபோது நோயாளிகளுக்கு வாய் வழியாக ஒரு சுவாச குழாய் செருகப்படுகிறது. குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள வெண்டிலேட்டரானது சுவாச காற்றை அவர்களுடைய நுரையீரலுக்கு தள்ளும். 3 வார காலம் இப்படி வெண்டிலேட்டரில் வைத்த பின்னர் டாக்டர்கள் அந்த நோயாளிக்கு டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். அதாவது தொண்டைக்கு கீழ்புற கழுத்து பகுதியில் ஒரு துளையிட்டு செயற்கை குழாய் செருகி, உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் அதன்வழியாக செலுத்தப்படும்.

    எனது நோயாளிக்கும் பல வாரங்களுக்கு முன்பாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    ஏறத்தாழ 2 மாதங்களாக அவர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட கால மறுவாழ்வு பெற முடியும். இது மற்ற நோயாளிகளுக்கும் நம்பிக்கையைத் தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×