search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு அருகே பயங்கர குண்டு வெடிப்பு

    ஆப்கானிஸ்தானில் ராணுவ கோர்ட்டு அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாடு ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்திருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அந்த நாட்டை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகர் காபூலில் உள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். அதே நாள் நங்கார்ஹர் மாகாணத்தில் போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியாகினர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொடூர தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் நேற்று நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் அந்த நாட்டையே உலுக்கியது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பாக்டியா மாகாணத்தின் தலைநகர் கார்டெசில் ராணுவ அமைச்சகத்தின் இயக்குனரகம் உள்ளது. இதன் அருகிலேயே மாகாண ராணுவ கோர்ட்டு, நிதி மற்றும் வருமானவரி அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதனால் இந்த பகுதி முழுவதும் எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும். துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் கார்டெசில் உள்ள ராணுவ அமைச்சக இயக்குனரகத்தை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் ராணுவ கோர்ட்டுக்கு அருகே லாரியை நிறுத்தி சோதனை போட்டனர்.

    அப்போது லாரியில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி லாரியில் நிரப்பி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் இந்த குண்டு வெடிப்பில் ராணுவ கோர்ட்டு உள்ளிட்ட சில கட்டிடங்கள், கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவை பெரும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் கூடுதல் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்பலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

    இதற்கிடையில் குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுசில் உள்ள 2 போலீஸ் சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
    Next Story
    ×