search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும், கொரோனா வைரஸ் தடுப்பு நிபுணர் அந்தோணி பாசிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது,
    வாஷிங்டன்:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்றுநோய், தொடர்ந்து அமெரிக்க நாட்டில் தனது கைவரிசையை காட்டி வருகிறது.

    அங்கு நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று 14 லட்சத்து 38ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து இருக்கிறது, 85 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிர்களை பறித்தும் இருக்கிறது. இருப்பினும் அங்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து மாகாண கவர்னர்கள் முடிவு எடுத்து அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் நிபுணராக உள்ள டாக்டர் அந்தோணி பாசி, கொரோனா வைரஸ் தொடர்பாக அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

    அப்போது அவர், வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்க பிறப்பித்துள்ள உத்தரவை சீக்கிரமாக தளர்த்துவது மேலும் கஷ்டங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தி விடும் என கடுமையாக எச்சரித்தார்.

    கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து குழந்தைகள் முற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று நினைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “கொரோனா வைரசைப்பற்றி நமக்கு எல்லாம் தெரியாது. மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் என்று வரும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. நாம் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது பற்றி படிப்படியாகத்தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்” எனவும் குறிப்பிட்டார்.

    பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்கும் விஷயத்தில் ஜனாதிபதி டிரம்புக்கும், கொரோனா வைரஸ் தடுப்பு நிபுணர் அந்தோணி பாசிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது வெளிப்பட்டது.

    அப்போது அவர், டாக்டர் அந்தோணி பாசி வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நாடாளுமன்றத்தில் டாக்டர் அந்தோணி பாசி அளித்த வாக்குமூலத்தின்போது அவர் எல்லா தரப்பிலும் விளையாட விரும்புவதை வெளிப்படுத்தினார்” என்று குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து டிரம்ப் கூறியதாவது:-

    பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை எனக்கு அதிருப்தியை தந்துள்ளது. அவர் பதிலைக்கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், இது எனக்கு மட்டுமே தெரியும். இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

    நமது நாடு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அது விரைவில் நடைபெற வேண்டும். முடிந்தவரையில், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தால், நமது நாடு பழைய நிலைக்கு திரும்புவதாக கருத முடியாது.

    வயதான ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வகுப்பு எடுக்க திரும்புவதற்கு இன்னும் சில வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே விஷயம். ஏனென்றால் கொரோனா வைரஸ் தொற்று நோய், வயதைத் தாக்கும் ஒரு நோய், இது ஆரோக்கியத்தையும் தாக்குகிறது.

    பள்ளிக்கூடங்களை கவர்னர்கள் திறக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×