search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டுகள்.
    X
    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டுகள்.

    3½ டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது

    ‘கொரோனா’ அச்சுறுத்தலுக்கு இடையே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 3½ டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    துபாய்:

    துபாய் ஜெபல் அலி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு ஒன்று உள்ளது. தற்போது நிலவும் ‘கொரோனா’ சூழலை பயன்படுத்தி இந்த பகுதியில் இருந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக வெளியிடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து துபாய் பொருளாதாரத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜெபல் அலி போலீசார் இந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூன்று வேன்களில் துணிகள், அலங்கார பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், பான், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தியபோது அந்த பகுதியில் வசிக்கும் டிரைவர்கள் 3 பேர் சட்டவிரோதமாக வேன்கள் மூலம் பல்வேறு பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று தெருவோர வியாபாரிகளிடம் விற்பனை செய்ய எடுத்து செல்வது விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து அந்த மூன்று டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 சேமிப்பு குடோன்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை அடுத்து அந்த பொருட்களுக்கு சொந்தமான மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து மொத்தம் 3½ டன் எடையுள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த பொருட்கள் எங்கு இருந்து?, எப்படி கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்று சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் எந்த பொருட்களையும் பொதுமக்கள் வாங்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×