search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏவியங்கா விமானம்
    X
    ஏவியங்கா விமானம்

    திவால் ஆகிறது ஏவியங்கா விமான நிறுவனம்- பாதுகாக்க கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

    கொலம்பிய விமான நிறுவனமான ஏவியங்கா நிறுவனத்தை திவால் நிலையில் இருந்து பாதுகாக்கக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், மனித உயிர்களை பலி வாங்குவதுடன், பல்வேறு தொழில்களை முடக்கி பொருளாதார பேரிழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்து தொழில் அடியோடு முடங்கி உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்கள், மீண்டும் விமான சேவையை தொடங்க முடியாத நிலையில் உள்ளன. 

    இந்நிலையில், கொலம்பியாவின் தேசிய விமான நிறுவனமான ஏவியங்கா, அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் திவால்நிலை பாதுகாப்புக்காக மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதால் நிறுவனத்தின் வருவாய் 80 சதவீதத்துக்கும் அதிகம் குறைந்துவிட்டதாகவும், செலவு அதிகரித்து திணறி வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    வழக்கு தொடர்ந்திருப்பதன்மூலம், நிறுவனத்தின் கடன்களை மறுசீரமைக்கவோ அல்லது வணிகத்தின் சில பகுதிகளை விற்று கடனை அடைக்கவோ அவகாசம் கிடைத்துள்ளது.

    உரிய சட்ட நடைமுறைகளை முடித்து திவால் நிலையிலிருந்து வெளியே வரத் தவறினால், தொற்றுநோயால் திவால் நிலைக்கு செல்லும் முதல் பெரிய விமான நிறுவனமாக ஏவியங்கா இருக்கும்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் கொலம்பிய வான்பகுதி மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் ஏவியங்கா நிறுவனத்தின் 140க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன. மொத்தம் உள்ள 20 ஆயிரம் ஊழியர்களில் பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×