search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    சீனாவிடம் இழப்பீடு கேட்க அமெரிக்கா நடவடிக்கையா? டிரம்ப் பதில்

    கொரோனா வைரஸ் விவகாரத்தில் பெருத்த சேதம் அடைந்துள்ள அமெரிக்கா, அதற்காக சீனாவிடம் இழப்பீடு கேட்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதில் அளித்தார்.
    வாஷிங்டன்:

    சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், 4 மாத காலத்தில் 185-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது.

    அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்த வைரஸ் தொற்று நோயால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

    உலகமெங்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. இதில் அமெரிக்காவின் நிலை பரிதாபமாக அமைந்துள்ளது. நான்கில் ஒரு பங்குக்கு மேலான உயிர்ப்பலி அமெரிக்காவில்தான் நேரிட்டுள்ளது.

    130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த தொற்றுநோய் 29ஆயிரம் பேருக்குத்தான் பரவி இருக்கிறது, பலியும் இன்னும் மூன்று இலக்க அளவில் (937) தொடர்கிறது என்றால் அதற்கு காரணம், ஆரம்ப நிலையிலேயே ஊரடங்கு உள்ளிட்ட கண்டிப்பான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதுதான்.

    இந்த வைரஸ் பரவல் தொடர்பான உண்மையான தகவல்களை சீனா ஆரம்பத்தில் மறைத்து விட்டதாக அமெரிக்கா இன்றளவும் கருதுகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளும்கூட அமெரிக்காவுடன் இதில் கருத்தொற்றுமை கொண்டுள்ளன.

    சீனா நினைத்திருந்தால், வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தால், தகவல்களை ஆரம்ப கட்டத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தால் துரதிர்ஷ்டவசமான உயிர்ப்பலிகளையும், பொருளாதார இழப்புகளையும் தடுத்து இருக்க முடியும் என கருதுகின்றன.

    இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், “கொரோனா வைரசால் ஏற்பட்ட இழப்புகளுக்காக 130 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10 லட்சத்து 79 ஆயிரம்கோடி) வழங்க கேட்டு சீனாவுக்கு ஜெர்மனி பில் அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாமே, உங்களது நிர்வாகமும் இதே போன்று இழப்பீடு கேட்க நடவடிக்கை எடுக்குமா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-

    அவர்களை விட நாம் எளிதானதை செய்ய முடியும். அதை விட எளிதாக செய்வதற்கு நம்மிடம் நிறைய வழிகள் இருக்கின்றன. நாம் இன்னும் இறுதி தொகையை நிர்ணயம் செய்து முடிக்கவில்லை. ஆனால் அது மிகவும் கணிசமான தொகையாக அமையும்.

    சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியும்...

    நீங்கள் உலகத்தைப் பார்த்தால், அதாவது உலகளாவிய சேதத்தை பார்த்தால், அமெரிக்காவுக்குத்தான் கூடுதல் சேதம். ஆனால் இது உலகத்தின் சேதம்தான்.

    நான் நிறைய வழிகள் இருக்கிறது என்று சொன்னேன். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியும். நாம் இது தொடர்பாக மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கும்கூட தெரிந்திருக்கலாம்.

    நாம் இப்போது சீனாவுடன் மகிழ்ச்சியாக இல்லை. நாம் ஒட்டுமொத்த நிலவரத்தில் மகிழ்ச்சியாக இல்லை. இதை தடுத்து இருக்க முடியும் என்பதுதான் நமது நம்பிக்கை. இதை ஒட்டுமொத்த உலகுக்கும் பரவாமல் பார்த்துக்கொண்டிருந்து இருக்க முடியும். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் தீவிர விசாரணை நடத்துகிறோம். உரிய நேரத்தில் இதுபற்றி தெரிந்து கொள்வீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பர் என்று டிரம்ப் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.

    இப்போது அது பற்றி அவர் குறிப்பிடுகையில், “ கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 70 ஆயிரம் வரை செல்லும் என கருதுகிறேன். வியட்நாம் போரில் 58 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் கொரோனாவில் 22 லட்சம் பேர் வரை பலியாகலாம் என கணிக்கப்பட்டது. அனேகமாக இது 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் வரை போகக்கூடும். நாம் சரியான முடிவுகள் எடுத்தோம். அதில் முக்கியமானது எல்லையை மூடியதும், சீன மக்கள் வருவதை தடை செய்ததும்தான்” என குறிப்பிட்டார்.

    பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தகவல் மையம், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்து விட்டதாக சொல்கிறது.

    அமெரிக்க எம்.பி.க்களின் சீன எதிர்ப்பு

    சீனாவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக அமெரிக்க தலைவர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    செனட் சபை எம்.பி. சிண்டி ஹைடு சுமித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ சீனா பொய்யானது. சீனா பயனற்றது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயின் தொடக்கம் முதலே தகவல்களை மூடி மறைத்து வந்திருக்கிறது. அதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

    நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. எர்ல் புட்டி கார்ட்டர், கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ஒரு தீர்மானம் இயற்றி உள்ளார்.

    அதில் அவர், “பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் இறந்து இருக்கிறார்கள். ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர். உலகமே தலைகீழாக புரட்டிப்போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த வைரஸ் நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். இந்த தீர்மானத்தை தாமதம் இன்றி நிறைவேற்றி அதன் அடிப்படையில் செயல்படவேண்டும்” என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×