search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா வைரசின் 2-வது அலை அமெரிக்காவை தாக்கும் - புதிய தகவலால் மக்களிடையே பீதி

    அமெரிக்காவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கும் என்று வெளியாகி உள்ள புதிய தகவலால் அந்த நாட்டு மக்களிடையே பீதி நிலவுகிறது.
    வாஷிங்டன்:

    கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியால் அமெரிக்கா படாதபாடு படுகிறது. உலக நாடுகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக விளங்குகிற ஒரு நாட்டால் இந்த வைரசை ஒன்றும் செய்து விட முடியவில்லை.

    இதுவரை அங்கு இந்த வைரஸ் தொற்றுநோய் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி இருக்கிறது. 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் நோய் உயிரிழக்கச்செய்துள்ளது.

    அங்கு நியூயார்க் மாகாணம்தான் இந்த நோய்த் தொற்றின் மையம் போல காட்சி அளிக்கிறது. அங்கு மட்டும் இந்த வைரஸ் நோய், 2 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது.

    18 ஆயிரத்து 900 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். இதன் அண்டை மாகாணமான நியூஜெர்சியும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. இங்கு 88 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தாக்கி நிலைகுலையச்செய்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோரின் சாவுக்கும் இந்த வைரஸ் நோய் அங்கு காரணமாகி உள்ளது.

    இதே போன்று பென்சில்வேனியா, கலிபோர்னியா, மிச்சிகன், இல்லினாய்ஸ் மாகாணங்களிலும் தலா 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் இந்த வைரஸ் தொற்றுநோயின் 2-வது அலையும் அமெரிக்க நாட்டில் தாக்குதல் நடத்தும் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மைய இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    அமெரிக்காவில் ஒரே நேரத்தில் காய்ச்சல் தொற்றுநோயும், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் இருக்கும். இது அமெரிக்க சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகும். அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் வழக்கமான காய்ச்சல் காலம் முடிகிற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத்தொடங்கியது.

    அமெரிக்காவில் வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கும். இது தற்போது பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை விட கடுமையானதாக இருக்கும்.

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு விதமான சுவாச கோளாறும் ஏற்படும். இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் பீதியை கிளப்புவதாக அமைந்துள்ளது.

    இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் டெபரோ பிரிக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்துகிறது. கொரோனா வைரஸ் சோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக அளவில் கண்காணித்தும் வருகிறோம்.

    கொரோனா வைரஸ் சோதனைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.

    குளிர்காலத்தின்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை கடுமையாக தாக்கினால் நிலைமை மோசமாகும். நியூயார்க் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கண்காணிப்பில் இருந்து எச்சரிக்கை சமிக்ஞைகள் எங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கண்காணிப்பை இப்போது வீழ்ச்சியில் இருந்து தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×