search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள்
    X
    டாக்டர்கள்

    கொரோனா வைரஸ் சிகிச்சையால் ஆபத்தில் சிக்கியுள்ள இந்திய டாக்டர்கள்...

    கொரோனா வைரசுடன் உயிருக்குப் போராடுகிற லட்சோப லட்சம் அமெரிக்கர்களை காப்பாற்றுவதற்காக அங்கு இருக்கிற இந்திய வம்சாவளி டாக்டர்களும், இந்திய டாக்டர்களும் தங்கள் உயிர்களைப் பணயமாக வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
    நியூயார்க்:

    7 லட்சத்து 63 ஆயிரம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியோரின் எண்ணிக்கை. இது நேற்று காலை நிலவரம் தான். ஒவ்வொரு நிமிடமும் கொரோனா வைரஸ் தாக்கம் அங்கு அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

    கொரோனா வைரசுடன் உயிருக்குப் போராடுகிற லட்சோப லட்சம் அமெரிக்கர்களை காப்பாற்றுவதற்காக அங்கு இருக்கிற இந்திய வம்சாவளி டாக்டர்களும், இந்திய டாக்டர்களும் தங்கள் உயிர்களைப் பணயமாக வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த சவாலான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற அவர்களில் பலரையும், கொரோனா வைரஸ் தொற்று பழி வாங்குவதுதான் பெருத்த சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    1994-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனது கணவருடன் சென்று குடியேறியவர் டாக்டர் மாத்வி அயா.

    நியூயார்க் நகரில் கொரோனா வைரசுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அமெரிக்கர்களை காப்பாற்றுவதற்காக களத்தில் நின்ற டாக்டர் மாத்வி அயா, இப்போது அதே நியூயார்க்கில் உள்ள ஆஸ்பத்திரியில் ஒரு கொரோனா நோயாளியாக படுத்திருக்கிருக்கிறார்.

    தனது அன்புக்கணவரை, செல்ல மகளை அவர் பார்க்க முடியாது. அவர்களுடனான அன்பை பகிர்ந்து கொள்வதற்கு, செல்போனில் குறுந்தகவல்களை மட்டுமே பரிமாறிக் கொள்கிறார்.

    கடந்த வாரம் இறந்த 61 வயது முதிய பெண்ணுக்கு சிகிச்சை அளித்தபோது மாத்விஅயாவுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டு விட்டது. தனது வாழ்வையே எந்த மருத்துவ சேவைக்காக அவர் அர்ப்பணித்தாரோ, அந்த சேவையே, அவரை மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

    நூற்றாண்டுக்கு ஒரு முறை வந்து தாக்குகிற வினோத வைரஸ் நோயில், இப்போது எண்ணற்ற இந்திய வம்சாவளி டாக்டர்கள் விழுந்து கிடப்பதாக அங்கு வாழ்கிற இந்திய சமூகத் தலைவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    நியூயார்க்கிலும், நியூஜெர்சியிலும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் பலர் மரணப்படுக்கையில் இருக்கிறார்கள். பலர் மரணத்தை தழுவிக்கொண்டு விட்டனர் என்பது நெஞ்சை கனக்க வைக்கிற தகவலாக இருக்கிறது.

    நியூஜெர்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு இந்திய டாக்டர். அவர் சிகிச்சை அளித்த கொரோனா நோயாளி, ஏதோ ஒன்றை எடுத்து வீச அது அந்த டாக்டர் முகத்தின்மீது போய் விழுந்து இருக்கிறது.

    அந்த டாக்டரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரையும் கொரோனா வைரஸ் தாக்கியது தெரியவந்தது. அவரை காப்பாற்றுவதற்கு மற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியாமல், மரணத்தை தழுவி இருக்கிறார்.

    இப்படி எத்தனை இந்திய டாக்டர்கள் கொரோனா வைரசில் விழுந்து கிடக்கிறார்கள், எத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்பதை கணக்கிடுவது கடினமான ஒன்று என்று அங்குள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ரவி கொல்லு கண்கள் கலங்க கூறுகிறார்.

    குறைந்தபட்சம் 10 இந்திய வம்சாவளி டாக்டர்களாவது இப்போது கொரோனா வைரஸ் தாக்கி ஆபத்தான கட்டத்தில் இருப்பார்கள் என்று இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தினர் சொல்கிறார்கள்.

    என்ன கொடுமை என்றால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் பணியாற்றுகிற டாக்டர்களில் பெரும்பாலோர், இந்தியாவில் இருந்து அங்கு போய் குடியேறிய இந்தியர்கள்தான்.

    இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தில் 80 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நியூஜெர்சியில் கடந்த வாரம் 43 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுநீரக மருத்துவ நிபுணர் பிரியா கன்னா, உயிரிழந்திருக்கிறார். அவரது தந்தையும் 73 வயது பொது மருத்துவ நிபுணருமான டாக்டர் சத்யேந்திரா கன்னா, அதே ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். பாவம், தன் அன்பு மகள் மறைந்தது கூட அவருக்குத் தெரியாது.

    அதனால்தான் இந்திய வம்சாவளி டாக்டர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று சொல்லி உருகுகிறார், அவர்களது சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் அனுபமா கோதிமுகுலா.

    நியூயார்க் ஆஸ்பத்திரி ஒன்றில் இந்த சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் அஜய் லோதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்திய சமூகத்தலைவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    மற்றொரு முன்னாள் தலைவரான டாக்டர் கவுதம் சம்மாதரின் மனைவியும், இரைப்பை குடல் மருத்துவ நிபுணருமான டாக்டர் அஞ்சனா சம்மாதர், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

    இன்னொரு பிரபல இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணரான டாக்டர் சுனில் மெஹ்ராவும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

    இரக்கத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இப்படி பல இந்திய வம்சாவளி டாக்டர்கள் அதே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

    இந்திய அமெரிக்க வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய வம்சாவளி டாக்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது என்று நன்றியுடன் நெகிழ்கிறார்.

    உயிருக்காக போராடுகிற இந்திய வம்சாவளி டாக்டர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தற்போதைய பிரார்த்தனை. தங்களை வாழ்விக்க அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்கர்கள். இறைவனின் செவிகளில் அவர்களின் பிரார்த்தனை எட்டுமா?
    Next Story
    ×