search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பரிசோதனையில் அமெரிக்காவுக்கு முதல் இடம் - டிரம்ப் பெருமிதம்

    கொரோனா வைரஸ் பரிசோதனையில் உலகின் பிற நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது என்று டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்காவுக்குத்தான் முதல் இடம்.

    இப்போது அந்த வைரஸ் பரிசோதனையிலும் அந்த நாடு, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை பின்னுக்குத்தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கிறது.

    இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்.

    இதையொட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் தொடர்ந்து அமெரிக்கா முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது. 41 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நடத்தி இருக்கிறோம். இப்படி உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை.

    பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, சுவீடன், கனடா ஆகிய நாடுகளில் மொத்தமாக கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கையை விட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

    ஆரம்பத்தில் தங்கள் நாடுகளை மூடுவதற்கு தயக்கம் காட்டிய இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதற்கான விலையை கொடுக்க நேரிட்டது.

    நாம் இதைச்செய்திருக்காவிட்டால் பல லட்சம் பேரின் உயிரை இழந்திருக்க நேரிட்டிருக்கும்.

    அதற்கு பதிலாக அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்குள் அடங்கி விடும். மிகக்குறைந்த அளவு என கணிக்கப்பட்ட 1 லட்சத்துக்கும் இது குறைவானதுதான். இது ஒரு காய்ச்சலுக்கு ஒப்பானதாகும்.

    கொரோனா வைரசுக்கு எதிராக நாம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டிருக்கிறோம். நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். நாம் அற்புதமான பணியைச் செய்திருக்கிறோம். சியாட்டில், டெட்ராய்டு, நியூ ஆர்லியன்ஸ், இண்டியானாபொலிஸ், ஹூஸ்டன் போன்ற பகுதிகளில் தொடர்ந்து நாம் முன்னேறிச்செல்கிறோம்.

    நமது கடினமான உத்திகள், நல்ல பலன்களை அளித்து உள்ளன. அமெரிக்க மக்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். எண்ணற்றோரின் உயிரைக்காப்பாற்றி இருக்கிறோம்.

    அமெரிக்க நாடு பாதுகாப்பாக இருக்கப்போகிறது. நான் எதையும் மூடி வைக்க விரும்பவில்லை. நாம் அழகாக, நேர்த்தியாக, முறையாக செய்கிறோம். பெரும்பாலான கவர்னர்களுடன் நாம் இணைந்து செயல்படுகிறோம்.

    ஓரிருவரை நீங்கள் என்ன செய்தாலும் திருப்திப்படுத்தி விட முடியாது. நாளை நீங்கள் எல்லோரும் குணம் அடைந்து விடுவீர்கள். அவர்கள் அப்போதும் திருப்தி அடைய மாட்டார்கள். குறை சொல்வதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பார்கள்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார். 
    Next Story
    ×