search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் டொனால்டு டிரம்ப்
    X
    பிரதமர் மோடியுடன் டொனால்டு டிரம்ப்

    மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது அமெரிக்கா

    அமெரிக்காவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

    அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

    நாளுக்கு நாள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவதால் அந்நாடு என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கிறது. 

    குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அதிகரித்து வரும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களில் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    கொரோனா நோயாளிக்கு முகக்கவசம்

    இந்த தடையால் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வைரஸ் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    இதற்கிடையில், கொரோனாவை ஆரம்ப நிலையில் குணப்படுத்தும் என பெரும்பாலான மருத்துவத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா கடந்த வாரம் தடை விதித்தது. 

    ஆனால், ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை தங்களுக்கு வழங்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். 

    இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய அரசு நீக்கியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
    Next Story
    ×