search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் காட்சி
    X
    கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் காட்சி

    மீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    உலகம் முழுவதும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்நிலையில், சீனாவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்த கொரோனா தற்போது அமெரிக்காவை அலற விட்டுவருகிறது. குறிப்பாக அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

    கொரோனா அச்சம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் வெள்ளை மாளிகை பகுதி

    தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    Next Story
    ×