search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 4¼ லட்சம் பேர் - மெத்தனத்தால் விளைந்த பாதிப்பு பற்றி அதிர்ச்சி தகவல்கள்

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவியவுடன் அங்கிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களை சரியாக பரிசோதிக்காததால் அமெரிக்காவில் நோய் பரவியது தெரிய வந்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில்தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா சொன்னது. அதன்பிறகும் ஜனவரி மாதம், முதல் 2 வாரங்களுக்கு சீனாவில் இருந்து வருபவர்களை அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதிக்கவில்லை. அதற்குள் சீனாவில் இருந்து, குறிப்பாக உகான் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்து விட்டனர்.

    ஜனவரி மாத மத்தியில்தான், விமான நிலையங்களில் அமெரிக்க அதிகாரிகள் பரிசோதனை செய்ய தொடங்கினர். அதிலும், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களில் மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கும் கூட உகானில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பின்னர்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பயண தடை விதித்தார். அவர் தடை விதிப்பதற்குள், சீனாவில் இருந்து 1,300-க்கு மேற்பட்ட நேரடி விமானங்களில் 17 அமெரிக்க நகரங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் வந்து விட்டனர். அவர்களில், பயண தடை அறிவித்த பிறகு 2 மாதங்களில் வந்த 40 ஆயிரம் பேரும் அடங்குவர். வந்தவர்களில், அமெரிக்கர்கள் மட்டுமின்றி வேறு நாட்டினரும் கணிசமாக உள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களும் அமெரிக்க அரசிடம் இல்லை. அவர்களை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சீனாவில் இருந்து வேறு நாடுகள் வழியாக அமெரிக்கா வந்தவர்களை பற்றிய எந்த கணக்கும் அமெரிக்க அரசிடம் இல்லை.

    பயணத்தடைக்கு பிறகும், அமெரிக்கர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, பீஜிங் நகரில் இருந்து கடந்த வாரம் வரை விமானங்கள் வந்து கொண்டிருந்தன. அப்படி வந்த 279 விமானங்களில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் ஏனோ தானோ என்று பரிசோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அரசின் இந்த மெத்தனமே, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணம் ஆகும். கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாலும், தாமதமாக அமல்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×